கொவிட் சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு!

பெரண்டினா நிறுவனம் அதன் கொவிட் -19 அவசரகால இடர்முகாமைத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பல உதவிச் செயற்பாடுகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம் உள்ளடங்களாக 9 மாவட்டங்களில் இயங்கிவரும் சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களுக்கும், கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கும்,   வறுமைக்கோட்டிற்குற்பட்ட தனது பயனாளிகள் குடும்பங்களுக்கும் மாவட்ட செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
 
இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்கீழ் இயங்கி வரும் கரடியனாறு மற்றும் வாகரை கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையங்களிற்கு உடனடி தேவையான ரூபா. 750,000.00 பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம் சாரா உபகரணங்கள் பெரண்டினா நிறுவனத்தினால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வின்போது, மட்டக்களப்பு பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.அச்சுதன், கரடியனாறு கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலைய பொறுப்பு வைத்தியர், பெரண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.விஜிந்தன், பிரதேச முகாமையாளர் மற்றும் சமூக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களும், கிளை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 
அத்தோடு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்கீழ் இயங்கி வரும் அக்கரைப்பற்று கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்கு உடனடி தேவையான ரூபா. 870,000.00  பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம்சாரா உபகரணங்கள் பெரண்டினா நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டதாக இந் நிறுவனத்தின் முகாமையாளரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts