கொவிட் 19 பெருந்தொற்று – சிகிச்சை, தடுப்பு, பாதிப்பு (ஒரு கண்ணோட்டம் – வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்)

 உலகலாவிய ரீதியில் மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்ற கொவிட் 19 வைரஸ் தாக்கம் குறித்தும் அதன் சிகிச்சை முறைகள், அதனைத் தடுப்பதற்கு உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அதன் பாதிப்பு நிலைமைகள் குறித்து கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுனருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களினால் ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
இவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
 
மனிதரில் சளிச்சுரநோயினை உருவாக்கி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக உலகளாவிய ரீதியில் ஒன்பது கோடிக்கும் அதிக மக்களைத் தாக்கியும் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தும்; பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் தொடர்கதையாக பாதிப்புக்களை ஏற்படுத்திக்கொண்டு மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட ‘கொவிட் 19’ எனும் கொரோனா வைரசு நுண்ணுயிரியின் தாக்கத்திலிருந்து விடுபடும் எத்தனங்களில் உலகின் முழுக்கவனமும் திரும்பியுள்ளது. 
 
தடுப்பு மருந்து வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதிக்கப்படுவதாகவும் செய்திகள் உலகத்தினரிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் எம்மை அடைகின்றன. மருத்துவத்துறையின் அபரிமித வளர்ச்சியின் மத்தியிலும் இந்நோய்த் தொற்றிற்கான சரியான சிகிச்சைமுறை அறியப்படாமல் கட்டுப்படுத்தும் முறைமைகளில் கடுமையான சட்ட கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வாட்டுகின்ற நோயாக இந்த வைரசுக்கிருமிக்காக இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மிகவும் பேசப்படுகின்ற தடுப்பு மருந்து தொடர்பாக நாம் ஆராய்வோம்.
 
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி ஒருவரைத் தாக்கும்போது உடலின் எதிர்ப்பு தொழிற்பாடு செயற்பட்டு நுண்ணுயிரின் நோய்த்தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து உடற்சுகத்தை கொடுப்பது எமது உடலில் உள்ள நோயெதிர்ப்புச்சக்தி அல்லது நிர்ப்பீடனத்தின் செயற்பாடு ஆகும். 
 
இதன் ஓர் அங்கமான அழர்ச்சித் தாக்கம் (Inflammatory reaction) அதிகரித்த உடல் வெப்பம், நோவு, அதிகரித்த சுரப்புக்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் வெளிப்படும் சில பதார்த்தங்கள் நுண்ணுயிரிகளை கொல்வது போலவே உடலின் கலங்களும் பாதிக்கப்படுகின்றன. கோவிட் வைரசு தாக்கத்திலும் நுரையீரல் கலங்கள் இவ்வாறு பாதிப்படைந்ததினாலேயே அதிகமானோரின் மரணம் சம்பவித்ததென ஆயந்தறியப்பட்டுள்ளது. எனவே கொவிட் தொற்றாளர்களுக்குரிய சிகிச்சையில் இவ்விடயமும் கவனத்தில் எடுக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
கொவிட் வைரசிற்காக பயன்படுத்தப்பட்ட மருந்துவகைகள் குறித்து பார்ப்போம். அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளில் இம்மருந்துவகைகள் ‘நோயாளரை குணப்படுத்துவதிலோ மரணங்களை குறைப்பதிலோ கணிசமாக பங்களிக்கவில்லை என்றே அறியவருகின்றோம்
 
1. அழர்ச்சித்தாக்க பாதிப்புகளை கட்டுப்படுத்த:
இதற்கென பொதுவாகப் பாவிக்கப்படும் மருந்துவகை (Cortico steroids) எனும் வகைப்படும். தொய்வு (ஆஸ்துமா) நோய் பாதிப்புள்ளவர்களில் பொதுவாக பயன்படும் இவ்வகை, குறைமாதபிரசவம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் சிசுவின் நுரையீரல் முதிர்ச்சியடையவும் அத்தாய்மாருக்கு வழங்கப்படுகின்றது. கொவிட் நோயாளரில் சில சுகநன்மைகள அறிவிக்கப்பட்டாலும் பெருமட்டில் பாவனைக்காக பரிந்துரைக்கப்படவில்லை.
 
2. குளோரோகுயின் (Chloroquine):
மலேரியா நோய்க்கான மருந்தான இது வைரசுக்கிருமித் தொற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. கொவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அதிகமாக பேசப்பட்ட மருந்து. இருதயத்தில் ஏற்படுகின்ற விளைவினால் ஐதரொட்சி குளோரோகுயின் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பெருமட்டில் பாவனைக்காக பரிந்துரைக்கப்படவில்லை.
 
3. வைரசுக்கெதிரானவை (Anti viral):
இவற்றில் பின்வருவன பயன்பாட்டிலுள்ளன  
1. றெமெடிஸ்வர் (Remdesivir) உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இம்மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொவிட் வைரசுத் தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் சிறப்பாக செயற்படும் இம்மருந்து, நோய்த்தொற்றின் பிந்திய நிலையில் வைரசின் அதிகரித்த பெருக்கம் உள்ள நோயாளரில் எதிர்பார்த்த நோய்சுகத்தையோ, மரணக்குறைப்பையோ ஏற்படுத்தவில்லை என காணப்பட்டுள்ளது.
 
2. லொபனவிர்/றிட்டோனவிர் (Lopinavir / ritonavir): எய்ட்ஸ்நோய் வைரசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய இம்மருந்து, கொவிட் நோயாளரில் வினைத்திறனாக செயற்படவில்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.
 
இவை தவிர ‘பாய்பொருள் சிகிச்சை’ (Convalescent Plasma Therapy) முதலியவையும் முயற்சிக்கப்படுகின்றன.
 
தடுப்பு மருந்து (Vaccine):
பல்வேறுவகையான தொற்றுநோய்களுக்கான நோயெதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்துகின்ற தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் நாம் அறிந்ததே. குழந்தை பிறந்ததில் இருந்தே இவை வழங்கப்படுகின்றன. குறிப்பாக இளம்பிள்ளைவாத நோயை ஏற்படுத்துகின்ற போலியோ வைரசுக்கு எதிரான சொட்டுமருந்து பிரயோகமானது இந்நோயினை உலகிலிருந்து ஏறத்தாழ முற்றாக இல்லாதொழிக்கும் அளவிற்கு வெற்றிகரமாயுள்ளது.
 
தற்போது மிக அதிகளவில் பேசுபொருளாயுள்ள கொவிட் 19 தடுப்புமருந்து குறித்துப் பார்ப்போம். மிக அண்மைய தரவுகளின்படி உலகில் 47 நாடுகளில் 77 வகையான தடுப்பு மருந்துகளுக்கான சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏழு தடுப்பு மருந்துகளுக்கு பல அங்கீகாரம் வழங்கப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்களுக்கு வழங்க ஆயத்தமாகின்றன. இந்தியாவில் இம்மாதம் 16ம் திகதி முதல் வழங்கப்படுன்றது.  
 
தடுப்புமருந்துகள் ஆறு வகைப்படும்.
1. வீரியம் குறைக்கப்பட்ட வைரசுக்கிருமியை உபயோகித்து உருவாக்கப்படும் தடுப்புமருந்து (Life attenuated vaccine)
2. செயற்பாடற்ற வைரசுக்கிருமியைக் கொண்ட தடுப்புமருந்து (Inactivated Virus Vaccine)
3.  வைரசுக்காவி அடிப்படை தடுப்புமருந்து (Viral vector-based Vaccine): இவ்வகையில் சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரசு உபயோகித்து தடுப்புமருந்து தயாரிக்கப்படுகின்றது
4. உபபிரிவுத் தடுப்புமருந்து (Subunit Vaccine): இவ்வகையில் வைரசில் உள்ள புரதத்துணிக்கையையொத்த செயற்கை புரதத்தை உபயோகித்து தடுப்புமருந்து தயாரிக்கப்படுகின்றது.
5. டீ.என்.ஏ தடுப்புமருந்து (DNA Vaccine): இவ்வகையில் வைரசுக்கலத்தில் உள்ள நிறமூர்த்தப் பதார்த்தமான டீஒக்சிறைபோ நியூக்கிளிக் அமிலத் துணிக்கையை உபயோகித்து தடுப்புமருந்து தயாரிக்கப்படுகின்றது.
6. ஆர்.என்.ஏ தடுப்புமருந்து (RNA Vaccine): இவ்வகையில் வைரசுக்கலத்தில் உள்ள நிறமூர்த்தப் பதார்த்தமான றைபோ நியூக்கிளிக் அமிலத் துணிக்கையை உபயோகித்து தடுப்புமருந்து தயாரிக்கப்படுகின்றது. 
 
மேற்குறித்த வகை தடுப்புமருந்து தயாரிப்பில் வைரசுக்கிருமி அல்லது அதன் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது. இது உடலுக்கு ‘பிறபொருள்’ (Antigen) ஆகும். இப் பிறபொருளுக்கு எதிராக ‘பிறபொருளெதிரியை’ (Antibody) உடலின் நீர்ப்பீடனத்தொகுதி உற்பத்தியாக்கும். கொவிட் வைரசிற்கு எதிரான பிறபொருளெதிரி உடலில் போதியளவில் இருக்கும் வரைக்கும் இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு இருக்கும். ஆகவே தடுப்பு மருந்தேற்றிக்கொள்வது கொவிட் 19 வைரசுத்தொற்றிலிருந்து எம்மைக் காக்கக்கூடியதாகவுள்ளதாக இருக்கின்றமை கண்கூடு.
 
இவை தவிரவும் நனோ தொழில்நுட்பம் மூலம் தடுப்பு மருந்து தயாரிப்பது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
இருப்பினும் பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுவது இயற்கையே. புதுவகை மருந்தாகவிருப்பதனால் அதன் பாதுகாப்பு, ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள், நோயெதிர்ப்புக் காலம் மற்றும் அதன் வினைத்திறன் போன்ற சாதாரண கரிசனைகளுக்கும் ஓரளவிற்கே தற்போது பதில் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் போதுமான அளவு உற்பத்தி, எடுத்துச் செல்வதற்கும், களஞ்சியப்படுத்துவதற்கும் தேவையான குளிரூட்டி வசதிகள், ஆளணி இவை அனைத்திற்கும் ஏற்படக்கூடிய செலவுகள், தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களும் கவனிக்கற்பாலது. 
 
கீழைத்தேய, பாரம்பரிய வைத்திய முறைமைகள்:
கொவிட் வைரசுத்தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்தே பல்வேறு மூலிகை மருத்துவங்கள் பற்றி பேசப்பட்டன. இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் இவற்றின் வினைத்திறன் தொடர்பான பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றன. ஆவிபிடித்தல், சூடான பானம் அருந்துதல், கொத்தமல்லி, மிளகு போன்ற வீட்டிலுள்ள பாவனைப் பதார்த்தங்கள் கொண்டு குடிநீர் போன்றவை தயாரித்து அருந்துதல் போன்ற கைங்கரியங்களை மேற்கொண்டு தங்களை சுகதேகியாக பேண முயற்சித்தல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை எந்தளவிற்கு கொவிட் வைரசுத் தொற்றிலிருந்து எம்மை காப்பாற்றும் என்ற கேள்விக்கான விஞ்ஞானபூர்வ விடை அல்லது போதுமான விளக்கம் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம்.
 
ஆதலினால், இன்றுள்ள நிலைமையின்படி உலகளாவிய ரீதியில் வியாபித்துக்கொண்டே செல்கின்ற கொவிட் பெருந்தொற்றிலிருந்து மனித குலத்தை பாதுகாக்கத்தக்கதான நம்பத்தக்க நடவடிக்கைகளாக இருப்பவை நாம் மிகவும் அறிந்தவையே. தன்சுத்தம் குறிப்பாக கைகளைக் கழுவுதல், தொற்றுநீக்கிகளை பாவித்தல், இரண்டு மீட்டர் சமுக இடைவெளி, வாயையும் மூக்கையும் மூடியதாக முகக்கவசம் அணிதல் ஆகிய வழிமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல் ஒவ்வொருவரதும் சமுகப் பொறுப்பாகும். 
 
அடிப்படை ஆரம்ப சுகாதாரம், பொருளாதாரத் தூண்டுதல், சமூகப்பாதுகாப்பு போன்றவற்றில் அனைவரதும் காத்திரமான பங்களிப்பு அவசியமாகின்றது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தற்போதைய இக்கட்டான நிலையிலிருந்து நாமும் உலகும் மீளெழ வழிசமைக்கும் என நம்பலாம்.
 
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
 
இக்கட்டுரைக்கான தகவல்கள் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வெளியான விஞ்ஞானக் கட்டுரையிலிருந்து பெறப்பட்டன.

Related posts