சமூர்த்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “துரித விவசாய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்” சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பம்

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

நாட்டில்  தற்போதைய சூழ் நிலையில் எதிர்கால உணவு தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் முகமாக சமூர்த்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும்  துரித விவசாய உணவு உற்பத்தி  வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை  பிரதேச செயலக பிரிவில் உள்ள சென்னல் கிராமம் 01,02  கிராம சேவையாளர் பிரிவுகளில்  சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல்.எம் சலீம் அவர்களின் தலைமையில் நேற்று (06)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனிபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

அரசாங்கத்தின் வேண்டுகோள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் சுமார் ஒரு ஏக்கர் காணியில் முன்மாதிரி வீட்டு தோட்டம் அமைத்து பொதுமக்களை விழிப்பூட்டுவதன் மூலம்   எதிர்காலத்தில் ஏற்படும் உணவு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பிராந்தியத்தில் பயிர்ச்செய்கை மூலம் விளைவிக்கக்கூடிய துரித உற்பத்தி பயிர்செய்கைகள் இனங்காணப்பட்டு அவற்றை மேற்கொள்வதற்கான உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உணவுப் பண்பாட்டு மேம்பாட்டுத் திட்டம் போன்ற விடயங்கள் இதன் கீழ் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்   ஏ.எல்.எம் அஸ்லம்,சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.ஏ ஹமீட் , வங்கிச் சங்க முகாமையாளர் எம்.எம்  அம்சார் ,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும் அதிகமான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன் அடிப்படையில் மரவள்ளி, மரக்கறி பயிர்கள், வற்றாளை செய்கை, தானியவகை உற்பத்திகள் போன்ற துரித உணவு உற்பத்திகள் பிரதேச செயலகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள வளாகங்கள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்கள், கிராமிய அமைப்பு அலுவலகங்கள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பொது இடங்கள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts