சாய்ந்தமருது நகர சபை விடயம் குறித்த அதாவின் கருத்துக்கள் நகைப்புக்குரியது : மக்களை ஏமாற்றியது போதும் – யஹியாகான்.

சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் – என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது என்று முகா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். ஏ.எல்.எம். அதாவுல்லா (28) நடத்திய ஊடக மாநாட்டில் சிறு பிள்ளைத்தனமாக கருத்துக்களை கூறியது மட்டுமன்றி சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஒரு விளையாட்டாக – அலட்சிய தோரணையில் கருத்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குமுரியது என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது.
 
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து – பாராளுமன்றத்துக்கு தெரிவான தேகா தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
அவ்வாறு இருக்கும் போது கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்று அதாவுல்லா கூறியிருப்பது வெறும் வெற்றுக் கதை மட்டுமன்றி பொய் பிரச்சாரமும் கூட. தே.கா தலைவர் எங்கு , எந்த இடத்திலும் சாய்ந்தமருது நகர சபை விடயமாக பேசத் தேவையில்லை.. பேச வேண்டிய இடத்தில் பேசாமல் , ஊடகங்களில் மட்டும் பேசி சாய்ந்தமருது மக்களையும் அவர்களின் நகர சபை கோஷத்தையும் கொச்சைப்படுத்துவது இனியும் அதாவுல்லாவுக்கு ஆரோக்கியமானதல்ல.
 
ஆக, அதாவுல்லா , இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த முனையாமல் சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த சாய்ந்தமருது மக்களின் 9000 வாக்குகளுக்காவது அதற்கு பரிகாரமாக தனது மிகுதி இரண்டரை வருட கால எம்பி பதவியை சாய்ந்தமருதுக்கு வழங்கி நன்றி செலுத்த வேண்டும் .சாய்ந்தமருது மக்கள் அதாவுல்லா  மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் என்னால் உறுதியாக கூற முடியும். சாய்ந்தமருது மக்கள் தமது நகரசபை விடயத்தில் அதாவுல்லாவை இனியும் நம்பவும் கூடாது. அவரது பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் ஏமாறவும் கூடாது.
 
அதேபோல் , சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகமும் இனியும் பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முனையாது , பள்ளிவாசல் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts