சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தந்தையை இழந்த 300 ஏழைச் சிறார்களுக்கு புதிய உடைகள்

 
( வி.ரி.சகாதேவராஜா)


மட். புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பினர் மாவட்டத்தில் தந்தையை இழந்த 300 ஏழை மாணவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதிய உடைகளை திருப்பழுகாமத்தில்வைத்து வழங்கிவைத்தனர்.

குறித்த சமூக நலன்புரி அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தந்தையை இழந்து குடிசைகளில் வாழும் 300 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வாழும் அன்பர்களின் நன்கொடைகள் மூலமாக தந்தையை இழந்த 300 ஏழை மாணவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புதிய உடைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம்  இவ் அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன்  தலைமையில் திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.

 இந் நிகழ்வின் அதிதிகளாக போரதீவுப் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.கமல்ராஜ் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோருடன் இன் நிறுவன நிருவாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.

ஏனைய 247 ஏழை மாணவர்களுக்கான புதிய உடைகளும் சனிஇ ஞாயிறுஇ திங்கள் ஆகிய மூன்று நாட்களும் இம் மாணவர்கள் வசிக்கும் கிராமங்களில் வைத்து அவர்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளதாக இந் நிறுவன மாவட்ட இணைப்பாளர் திருமதி சிவசுந்தரி பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் சமூக நலன்புரி அமைப்பு 1996ஆம் ஆண்டு திருப்பழுகாமத்தினை சேர்ந்த சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

இவ் அமைப்பானது கடந்த 25ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறுபட்ட மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றமை தெரிந்ததே.

Related posts