தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

 அம்பாறை கச்சேரியில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனு கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம். அம்பாறை மாவட்டதில் கல்முனை மாநகரசபை தவிர்த்து மற்றைய அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற ஆறு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை  கையளித்துள்ளோம்.

ஜனநாயகம் பொருந்திய எமது தமிழரசுக் கட்சியிலே இம்முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எனவே மக்கள் நிச்சயமாக எமது கட்சிக்கு உறுதியான ஆணையைத் தருவார்கள் என்று நம்புகின்றோம்.

மாகாணசபை மற்றும் இந்த உள்ளூராட்சி மன்றங்களிலேயே எமது அரசியல் அதிகாரம் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பலமாக இருந்து செயற்பட்டு எமது மக்களையும், எங்கள் மக்களின் வாக்குகளையும் எமது அரசியற் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முகம்கொடுக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன ஒன்றாகக் கேட்கும் போது வட்டாரம், விகிதாசாரம் என்ற ரீதியில் இத்தேர்தல் முறை இருப்பதால் எமக்கு அதிக பின்னடைவு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் நாங்கள் தனித்துக் கேட்கின்றோம்.

நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம்.

எமது மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த அடிப்படையில் ஒற்றுமையாகவே நாங்கள் செயற்படுவோம்.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார்.

Related posts