தமிழினமக்களின் அபிவிருத்திமட்டுமன்றி தனித்துவங்களும் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவிப்பு.

நல்லாட்சி என்ற பெயரில் இலங்கையில் உள்ள அனைத்து இனமக்களின் அபிவிருத்தி மட்டுமன்றி தனித்துவங்களும் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தங்களது தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும், நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் வேதனைப்பட்டு விரக்தியுடன் இருக்கும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்துக்கொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆதரிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மூன்று ஆசனங்களுக்கும் மேல் பெறவேண்டுமென்பதில் மக்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். மக்களின் ஆதரவினை குழப்பும் முகமாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முகமாகவும் குறித்த சில அரசியற்தலைவர்களும் பெயர் குறிப்பிட முடியாத அல்லது பதிவு செய்யப்படாத சில ஊடகங்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் அடாவடித்தனங்களில் ஈடுபடுவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் கூறிவருகின்றனர்.இது தொடர்பில் நாங்கள் தேர்தல் முறைப்பாட்டுக் குழுவினரிடமும் பொலிஸாரிடமும் முறைப்பாட்டைச் செய்திருக்கின்றோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனநாயகப் பாதையில் சென்று கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிகமான வாக்குகளையும் ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றிருந்தது. அதேபோன்று இம்முறையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்கும் என்ற உறுதியில் மக்கள் இருக்கின்றார்கள். ஆகவே தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது சேறு பூச யாராவது விளைந்தால் மக்கள் அவர்களை ஓரங்கட்டுவார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை பயன்படுத்தி அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முகமாக யார் ஈடுபட்டாலும் அவர்கள் சட்டத்தின்பால் தண்டிக்கப்படுவார்கள். நாங்கள் அதில் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டிருக்கின்ற மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அக்கட்சியின் வெற்றிக்காக முன்னின்று உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அக்கட்சியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் எந்தவிதமான தேர்தல் வன்முறைகளும் நடைபெறக்கூடாது என்பதிலும் தேர்தல் சட்டதிட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதிலும் உறுதியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சென்ற இடங்களில் எல்லாம் படகுச் சின்னத்தையே மக்கள் உச்சரித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது இம்முறை தேர்தல் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். எங்களது கட்சியினால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகின்ற கூட்டங்களிலும் விஷேட கலந்துரையாடல்களிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வதனையும் ஏனைய கட்சிகளின் பால் எத்தனை பேர் சென்றுகொண்டிருக்கின்றனர், எவ்வாறு அரசியல் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது தொடர்பில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மட்டக்களப்பிலுள்ள மக்கள் இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆதரித்து இம்முறை அதிகமான ஆசனங்களை பெறவேண்டும் என்பதற்காக மக்களாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரங்களில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்புகள் முடிவடைந்ததன் பிற்பாடு பல அதிகாரிகள் எங்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத்தான் தாங்கள் வாக்களித்துள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஆட்சிக்கு வரவேண்டும் எனவும் தமிழர்கள் ஆண்ட கிழக்கு மாகாணசபையானது மாற்று சமூகத்தலைவர்களிடம் சென்ற நிலைமை மாற்றப்பட்டு இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு அடுத்ததாக நடைபெறவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணசபையையும் கைப்பற்றவேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கின்றார்கள்.

இலங்கையின் வரலாற்றிலேயே தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படுகின்றபோது தேசிய ரீதியிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாவட்டத்திற்கென்று ஒரு சிறு பந்தியை மாத்திரம் ஒதுக்குவார்கள். ஆனால் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயம்,கல்வி,கலை,கலாசாரம்,பொருளாதாரம்,தனிப்பட்டவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தல், உட்கட்டமைப்பு என அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக 28பக்கங்களைக் கொண்டதாக துறைசார் நிபுணர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றுவதுடன் கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாகவும் தனித்துவம் ரீதியாகவும் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற நிலங்கள்,நிர்வாகம், பொருளாதாரம் என அனைத்து விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டு தமிழர்களின் தனித்துவத்தையும் பாதுகாத்துக்கொண்டு நல்லதொரு சூழலை உருவாக்கி ஆட்சியை நடத்திக் காட்டுவோம் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உழைத்தோம். காரணம் நல்லாட்சி என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக கிழக்குமாகாணத்திலும் வடமாகாணத்திலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் இருக்கின்ற மக்களின் அபிவிருத்தி,பொருளாதாரம்,தனித்துவம் என்பன சீர்குலைக்கப்பட்டிருந்தது. நாடு மிக மோசமாக அதளபாதாளத்தில் தள்ளப்பட்டிருந்தது. அந்த நிலையை மாற்றுவதற்காக நாங்கள்; கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக வரவேண்டும் என பாடுபட்டோம். மாகாணசபை ஆட்சிக்காலத்தில்கூட நாங்கள் அவருடன் இணக்க அரசியல் நடத்தியிருந்தோம்.

அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக ஆசனங்களைப் பெற்று மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அனைத்து கட்சிகளையும் சமூக ஆர்வலர்களையும் சமூகத்தை நேசிப்பவர்களையும் உள்ளடக்கிய வகையில் எல்வோரும் ஒரே கூரையின்கீழ் வரவேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்களாக பாடுபட்டோம். அந்த அடிப்படையில் கிழக்குத் தமிழர் ஒன்றியம்,கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் என அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதன்மூலமாக ஒவ்வொரு துறைசார்ந்த வேட்பாளர்களையும் தெரிவு செய்திருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் நேசிக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்திருக்கின்றோம். அவர்கள் தங்கள் துறைகளில் வல்லுநர்களாக இருக்கின்றனர். ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் அவ்வாறு தெரிவு செய்தார்களா இல்லையா என்பதை நான் குறிப்பிட முடியாது. நாங்கள் துறைசார் வேட்பாளர்களையும் தகுதியானவர்களையுத் தெரிவு செய்திருக்கின்றோம் என்பதற்காகவே மக்கள் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் நிற்கின்றனர். இதனால் மக்கள் எங்களை மேலும் நேசிக்கத்தொடங்கியிருக்கின்றனர்.

துறைசார் வேட்பாளர்கள் வெற்றிபெறுமிடத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை மக்கள் ஆதரித்து நாங்கள் அதிகமான ஆசனங்களை பெறுமிடத்தும் நிச்சயமாக நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடிய சூழல் உருவாகும்.

சூழ்நிலையைப் பொறுத்து மக்கள் தங்களுக்கான தலைவர்களை தெரிவு செய்து கொள்வார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் எல்லோரும் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்கள். பின்பு அது வீடாக மாறியது. அதன் பின்பு சூரியனாக மாறியது. ஆனால் இந்தக் கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்து நாற்பது வருடங்களாக எந்தவித அபிவிருத்தியையும் தனித்துவத்தையும் பெறாமல் தமிழர்களின் இருப்பையும் பாதுகாக்க முடியாமல் ஏமாற்றமடைந்திருக்கின்ற தமிழ் மக்கள் இம்முறை படகுச் சின்னத்தை ஆதரிக்கின்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர். இது காலநீரோட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்ற விடயமாகும்.

அதேபோன்று தேசிய அரசியலிலும் அன்று ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தார்கள்,பின்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தார்கள்,கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியை ஆதரித்திருந்தார்கள்.எந்தக் தலைமைகள் அபிவிருத்திப் பணிகளையும் தனித்துவத்தையும் பாதுகாக்கின்றது என்ற அடிப்படையில் மக்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் நல்ல தலைமைகளை தெரிவு செய்வார்கள்.

நாங்கள் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். தனிப்பட்டவர்களை விமர்சித்துக்கொண்டிருப்பதற்கு அரசியல் என்பது வியாபாரமல்ல. நாங்கள் மக்களுக்காக வேலை செய்ய வந்தவர்கள். கதிரைகளை சூடாக்க வந்தவர்களல்லர்.அந்த வகையில் நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எவரையுமோ அல்லது அரசியற்கட்சிகளையோ விமர்சிப்பவர்கள் அல்லர்.கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு ஒவ்வாததாக இருந்தால் அதனை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு மக்களின் ஆணையைப் பெற்று மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களே தவிர யாரையும் விமர்சித்துக்கொண்டிருப்பதற்கு வந்தவர்கள் அல்லர்.

Related posts