தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாகவே முழுமையாக இல்லாது விட்டாலும் அதிகளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன

(டினேஸ்)

வெறுமனே கோவைகளில் மாத்திரம் கிணறு அமைத்தமையே முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆட்சியில் அமைந்த விவசாய அமைச்சின் கைங்கரியம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி நடாத்திய இரண்டரை ஆண்டுகளில் சிறந்த செயற்திறனுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளும் வெள்ளி, தங்க விருதுகளைப் பெற்றது கிழக்கு விவசாய அமைச்சு. ஒப்பீட்டளவில் கிழக்கில் இரண்டரை ஆண்டுகளிலே ஒருவர் கூட விரல் நீட்டிக் கதைக்க முடியாத அளிவிற்கு நாங்கள் செயற்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தின் ஊடாக வந்தாறுமூலை விஸ்ணு ஆலய புனரமைப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்படும் வேலைப்பாடுகளைப் பார்வையிடுவதற்காக இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்த வேளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாகவே முழுமையாக இல்லாது விட்டாலும் அதிகளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று அரசியற் கைதிகளிலும் இருந்தவர்களில் அரைவாசிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தினை ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்குக் கொண்டு வந்து அங்கு இலங்கையையும் முன்நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் இணங்க வைத்துப் பொறுப்புக் கூறல் விடயத்திற்கு இணை அனுசரணை வழங்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட்டது. சமஷ்டி ஆட்சி என்பதற்கு அடிப்படையான அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்குரிய செயற்பாடுகள் குறிப்பிட்டளவு தூரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எக்காலமும் இல்லாத விதத்தில் இந்த குறிப்பிட்ட காலத்தில் வடக்கு கிழக்கிற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அபிவிருத்தி தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் பல்வேறு நிதிமூலங்கள் கொண்டுவரப்பட்டு அதனூடாகப் பல்வேறு செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 எனவே இவ்வாறான விடயங்கள் பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எமது அன்பர்கள் முயலுக்கு மூன்று கால் என்ற விதத்திலே வௌ;வேறு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே போன்று கடந்த கிழக்கு மாகாண ஆட்சியின் போது முஸ்லீம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்கள் முண்டுகொடுத்தார்கள் என்று சொல்கின்றார்கள். கிழக்கு மாகாணசபை வெறுமனே பதினெட்டு உறுப்பினர்களை மாத்திரம் கொண்டதாக இருக்கும் என்றால் நிச்சயமாக பதினொரு உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியினைப் பெற்றிருக்கும் அதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையில் முப்பத்தேழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆட்சியமைப்பதற்கு பத்தொன்பது உறுப்பினர்கள் தேவை. நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் வருவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு முதலமைச்சுப் பதவியைக் கோரினார்கள். அது முடியாத விடயம். ஏனெனில் கிழக்கு மாகாணம் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்குரியது அதில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு விடயம். இருப்பினும் அவர்கள் வந்தாலும் மேலும் மூன்று உறுப்பினர்கள் தேவை ஆட்சியமைப்பதற்கு.

 அதேவேளை ஹாபிஸ் நசீர் அவர்கள் ஏற்கனவே முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவர். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கையெழுத்து வைத்து உருவாக்கிய முதலமைச்சர் அல்ல. கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் படி இரண்டரை வருடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மிகுதி இரண்டரை ஆண்டுகள் முஸ்லீம் காங்கிரசும் முதலமைச்சர் பதவியை வகிப்பதாகவே நியமிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதல் இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன், ஜெயம், உதுமாலெப்பை, சுபைர் போன்ற பலரும் கையெழுத்து வைத்து உருவாக்கியவர் தான் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள்.

அவ்வாறு முதலமைச்சர் உருவாக்கப்பட்டுள்ள போது, எங்கள் பக்கம் பத்தொன்பது பேரைச் சேர்த்துக் கொள்ள முடியாத யாதார்த்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அந்த முதலமைச்சருடன் சேர்ந்து ஆட்சியில் நாங்களும் இணைத்துக் கொள்ளப்பட்டோம். இதுவே உண்மை நிலை. இந்த உண்மை நிலையைப் பலமுறை நாங்கள் தெரிவித்தும் வந்துள்ளோம். ஆனால் அவை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை.

கடந்த மாகாணசபையில் இறுதி இரண்டரை வருடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி, விவசாயம் என்ற இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றது. கல்வி அமைச்சைப் பொருத்தவரையில் கடந்த கால ஆட்சியாளர்களினால் முரணான விதத்தில் செயற்படுத்தப்பட்ட விடயங்களை மாற்றுகின்ற அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் விவசாய அமைச்சு முழுமூச்சுடன் செயற்பட்டு அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம்.

அண்மையில் ஒன்பது மாகாணங்களையும் ஒப்பீட்டு நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின் போது செயற்திறன், வினைத்திறன், நிதியினை அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பயன்படுத்துதல், சிக்கனமாகப் பயன்படுத்துதல், வெளிப்படுதன்மை ஆகிய ஐந்து விடயங்களையும் ஒப்பிட்டு ஒன்பது மாகாணங்களுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியிலே 2017ம் ஆண்டுக்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சு தங்க விருதினைப் பெற்றது. அதே நேரத்திலே 2016ம் ஆண்டுக்காக வெள்ளி விருதினையும் பெற்றிருந்தது. இக்கால கட்டத்திலே இவ்விவசாய அமைச்சினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழிநடத்தியது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது என்பதை நமது அன்பர்கள் சொல்லத் தேவையில்லை, அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஆனால் இதனை இலங்கையில் உள்ள மிக உயர்ந்த மதிப்பீட்டாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கருமங்களை மிகவும் கருத்துக் கருமானங்களோடு செய்திருக்கின்றது.

எமக்குப் பெரிய தேவைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு நொடியிலே நாங்கள் செய்துவிட முடியாது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்தளவில் இரண்டரை ஆண்டுகளிலே ஒருவர் கூட விரல் நீட்ட முடியாத அளிவிற்கு நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

 எங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் விவசாய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரின் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரத்திலே பதினைந்து கிணறுகள் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எமது ஆட்சியின் போது அப்பிரதேச மக்களின் வேண்டுகோளின்படி கிணறுகள் கட்டுவதற்கு கோவைகளைப் பார்க்கும் போது கோவைகளின் அடிப்படையில் அங்கு கிணறு கட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் தங்கவேலாயுதபுரத்திற்குச் சென்ற பார்ததால் அங்கு வெறும் குழி மாத்திரமே இருக்கின்றது. வெறுமனே குழியை மாத்திரம் வைத்துக் கொண்டு கிணறுகள் கட்டப்பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தது தான் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆட்சியில் இருந்த விவசாய அமைச்சின் கைங்கரியம்.

ஆனால் நாங்கள் அவ்வாறு வெறுமனே கோவையில் மாத்திரம் கணக்கு காட்டுபவர்கள் அல்ல. 147 மில்லியன் ரூபாயில் கரடியனாற்றில் விவசாயப் பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்திருக்கின்றோம். அதே போன்று மண்டூர் பண்ணை, தும்பங்கேணி ஆட்டுப் பண்ணை, இது போன்ற பல்வேறு செயற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சொல்ல வேண்டிய நேரத்தில் துல்லியமாக வெளிப்படுத்துவோம். இவை வெறும் உதாரணங்களே. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று செய்யவில்லை என்று கூறுபவர்களுக்காக இவை.

 எனவே தேசிய மட்டத்திலே அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்கள், மாகாண மட்டத்திலே மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி விடயங்கள் இவற்றையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்தது. அதே நேரத்தில் இறுகி வைரமாக இருக்கின்ற பேரினவாதத்திடம் இருந்து எமது உரிமையப் பெற்றெடுக்கின்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பக்குவமாக உலக நாடுகளை அனுசரித்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற தெரிவித்தார்.

 

Related posts