தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

தமது ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் தமிழரசு கட்சி தீர்மானம் மேற்கொள்ளும் என்றும் மாவை தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் கீரிமலையில் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் 16 ஆவது மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் கூட்டமொன்று இன்றைய தினம் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான கே.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில், தமிழரசு கட்சியின் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் நிருவாகிகள், கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் தலைமையில் ஏப்ரல் 11 ஆம் திகதியான இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தை தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரணில் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிபீடமேற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலமைப்பு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, போர்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கான பொறுப்புகூறல் உள்ளிட்ட பல விடயங்களை நிறைவேற்றத் தொடர்ந்தும் தவறிவரும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்கி வருவது தொடர்பில் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர் மீது தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

இதனைஅடிப்படையாக வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஏனைய தமிழ் கட்சிகள் மாத்திரமன்றி பிரதான அரசியல் கட்சிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுவருகின்றன. இந்த நிலையிலேயே பிரதமர் ரனில் தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிவருவதை தமிழ் தேசியக் கூடடமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் முக்கிய தீர்மானங்களை தமிழரசு கட்சி எடுக்க உள்ளதாக கூறியிருக்கின்றார்.

Related posts