தாழ்வு மனப்பான்மையை அகற்றி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வாசிப்பு கைகொடுக்கிறது-ஜெஸ்மி எம்.மூஸா தெரிவித்தார்.

தாழ்வு மனப்பான்மையை அகற்றி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வாசிப்பு கைகொடுக்கிறது. அது வீட்டுச் சூழலில் சிறுபராயத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது

இவ்வாறு இலக்கிய விமர்சகரும்  ஆய்வாளருமான ஜெஸ்மி எம்.மூஸா தெரிவித்தார்.

 

தேசிய வாசிப்பு மாதத்தை மன்னிட்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஒக்டோபர் வாசிப்பு மாத செயற்றிட்ட நிகழ்வில் பிரதம பேச்சாhளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அதிபர் முகம்மட் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இலக்கிய விமர்சகர்

‘வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்’ எனும் தொனிப் பொருளை இவ்வருடத்திற்கான வாசிப்பு மாதம் தாங்கியுள்ளது அதன் சிறப்பம்சமாகும்.

‘கருவுற்றிருக்கும் தாய் நல்ல நூல்களை வாசிக்கும் போது அக்குழந்தையின் மூளைவிருத்தி உந்தப்படுகிறது’ என்கின்ற உளவியளாளர்களின் கூற்றினையும் ‘குழந்தையின் முதல் ஆசான் தாய் அக்குழந்தை தாலாட்டிலிருந்தே கற்கவும் அறியவும் ஆரம்பிக்கிறது’ எனும் ,இலக்கிய ஆய்வாளர் தமிழ் அண்ணலின் கூற்றினையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது உளவியலும் ,இலக்கியமும் ஒன்றிணைந்த பார்வையிலே , இவ்வருட வாசிப்பு மாதக் கருப்பொருள் அமைந்துள்ளமை அழகியல் அம்சமாகும்.

 

வாசிப்பின் மூலம் சிந்தித்தல், ஆராய்தல், காரணம் கண்டறிதல், கற்பனை செய்தல் முதலிய திறன்கள் வளர்கின்றன. ஒரு மனிதன் சந்தோசமாக அல்லது மகிழ்ச்சியாக ,இருப்பதற்கும் பொழுதைப் போக்குவதற்கும் வாசிப்பு துணைநிற்கின்றது. மகிழ்ச்சியாக உள்ளவனே சுயமாக சிந்திக்கும், ஆராயும், கருத்துக்களை வெளியிடும் நிலையில் எப்போதும் தன்னை வைத்திருப்பான். அவனே சமூகத்தின் பார்வைக்குட்பட்டவனாக மாறுகின்றான். 

. அறிவாளியையும் அறிவிலியையும் வேறுபடுத்துவது வாசிப்பேயாகும். கோபம், பயம், விரக்தி உள்ளிட்ட உளரீதியான பாதிப்புக்களிலிருந்து வாசிப்பு பாதுகாப்பளிக்கின்றது. மொழி விருத்தி அடைவதுடன் தன்னம்பிக்கை வளர்கிறது. ஞாபக சக்தி விருத்தி பெற்று, கௌரவம் உயர்ந்து, தொழிலில் தேர்ச்சி அடைந்து, பல்துறை ஆளுமையுள்ள மனிதனாகத் தன்னை அடையாளப்படுத்த வாசிப்பே வழிகோலுகிறது.

மரணித்த பின்னரும் ஒருமனிதனுடன் உறவாடவும் தர்க்கிக்கவும் அவனை ஆய்வு செய்யவும் முடியுமான சந்தர்ப்பத்தை வழங்குவது வாசிப்பேயாகும். ,இக்கருத்தையே ‘பழங்கால புருஷர்களை நேரில் சந்திக்க வேண்டுமானால்,அவர்களோடு உரையாட வேண்டுமானால் நூலகத்துக்குப் போ’ என வலிமை சேர்க்கிறார் மாசேதுங்.

மகாத்மாக் காந்தியிடம் ‘உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தரப்பட்டால் என்ன செய்வீர்கள்’ எனக் கேட்ட போது ‘ ஒரு நூலகம் அமைப்பேன்’ எனக் கூறியமை நூலகத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தமையைப் பறைசாற்றுகிறது.

‘புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே’ என்றார் லெனின். ‘வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தகம் வாசிக்க அனுமதியுங்கள்’ என்றார் நெல்சன் மண்டேலா.

இவ்வாறாக,பெரும் அறிஞர்களும் போராட்டக்காரர்களும் கூட புத்தகங்களையும் நூலகங்களையும் பற்றி ,இக்கட்டான கால கட்டங்களிலும் பேசியிருக்கிறார்கள் என்றால் வாசிப்பின் சுவையை அவர்கள் உணந்துள்ளார்கள் என்பதே முடிவாகும்.

வாசிப்பினை வழக்கமாக்க வீட்டுச் சூழலை வாசிப்பின் முற்றங்களாகவும் வாசிப்பின் முகாங்களாகவும் மாற்ற வேண்டும்.நவீன ஊடகங்களின் வருகையினால வாசிப்புத்திறன் தூரமாகிச் செல்கிறது என்கின்ற கருத்தினையும் ஏற்காமல் இருக்க முடியாது. எனினும் முறையானஇ நேர்மையானஇ ஆழமான வாசிப்புக்கு நூல்களும் அவற்றைச் சுமந்திருக்கும் நூலகங்களுமே சிறந்த ஊடகம் என்பதில் மாற்றுக்கருத்துக்களில்லை என்றார்.

Related posts