தொண்டமான் ஆட்சியாளர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவராக விளங்கினார் : ஹக்கீம் புகழாரம் 

 
 
அபு ஹின்சா
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறிப்பாக மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, வட கிழக்கிலும் நாடெங்கிலும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு மத்தியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் தானைத் தளபதியாக பல தசாப்த காலங்களாக கோலோச்சிய மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் அடுத்த அரசியல் வாரிசாக அடையாளப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்பியதோடு நில்லாது, பெரும்பாலும் தான் சார்ந்த மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீகப் போராட்டத்தில் ஆட்சியாளர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவராக விளங்கினார்.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவராகக் காணப்பட்ட நண்பர் ஆறுமுகன் பொதுவாகவே ஸ்தாபகத் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் அரசியல் களத்தில் ஏற்படும் உடைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் துணிச்சலுடன் முகம் கொடுத்து தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத் தொழிலாளர் பரம்பரையின் சமூக அரசியல் செல்நெறியை முன்கொண்டு செல்வதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.
 
மலையக மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை உரியமுறையில் வென்றெடுப்பதற்காக அவர்களிலிருந்து தோற்றம் பெற்றுள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் ஒரு போதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும், இறுதி மூச்சிவரை தனது மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும், விமோசனத்திலும் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கண்ணும் கருத்துமாக இருந்ததற்கு அவரது அரசியல் நகர்வுகளும், நடவடிக்கைகளும் சான்று பகர்கின்றன.
 
மலையக மக்களை மையப்படுத்தியே அவரது பேச்சும், மூச்சும் இருந்த போதிலும், அன்னாரின் செயற்பாடுகள் நாடு தழுவிய ரீதியில் பெரும்பான்மைச் சமூகத்தினரின் மத்தியில் வாழும் சிறுபான்மை மக்களின் விடிவை நோக்கியும் அமைந்திருந்தமை அவரது வாழ்வின் சிறப்பம்சமாகும்.
 
மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும், அவரை நேசித்த மண்ணின் மைந்தர்களுக்கும் தனித்தப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts