தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் கிழக்குமாகாணம் பாதுகாக்கப்படுமா

அரசாங்கத்தினால் கிழக்குமாகாணத்திற்கு தனியான தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் கிழக்குமாகாணம் பாதுகாக்கப்படுமா என்ற நிலை இன்று உருவாகி இருக்கின்றது. என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலக்கத்தில் போட்டியிடும்  வேட்பாளர் க.யோகராச கேள்வி எழுப்பினார்.

துறைநீலாவணையில் 8 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமையினை வெற்றெடுப்பதற்கு அகிம்சை வழி ஆயும் எனப் போராடிய எமது மக்களுக்கான உரிமை இன்னும் கிடைக்கப்பெறவில்லை அவ் உரிமையினைப் பெற்றெடுப்பதற்காக நாம் அனைவரும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கிழக்குமாகாணத்தில் தொல்பொருள் செயலணி என்ற போர்வையில் செயலணி அமைக்கப்பட்டு இருக்கின்றது இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது இது வரை காலமும் அமைக்கப்படாத செயலணி இன்று எதற்கு அமைக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழர்கள் பல போராட்டங்களின் மத்தியில் தங்களது உரிமையினைப் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம் ஆனால் உரிமை வழங்கப்படுமா தமிழர்களது அடையாளங்கள் காப்பாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டிருக்கும் கட்சிகள் தொடர்ந்து இருந்து எதனையும் சாதிக்கவில்லை அவர்கள் இனி சாதிக்கப்போவதுமில்லை என்பதனை சிந்தித்து நாம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் களம் இறங்கியிருக்கின்றோம். எங்களுக்கான ஆணையினை எமது மக்கள் வழங்குவார்கள் என்றால் அரசியல் தீர்வு விடயத்துடன் தமிழ்மக்களின் அபிவிருத்தியினையும் முன்னெடுக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்

Related posts