நாட்டின் பல இடங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று

நாட்டின் பல இடங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு காற்றுடன் கூடிய நிலை நீடிக்குமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts