நிலக் கடலை அறுவடை விழா

அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் விவசாயத் திணைக்களத்தின் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் உப உணவு உற்பத்தித் திட்டத்தினை ஊக்குவிக்கும் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் வழிகாட்டல்களுக்கமைவாக, ஒலுவில் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை விழா  ஒலுவில் பிரதேசத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.
 
பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஆர்.விஜயராகவன் தலைமையில் இடம்பெற்ற இவ் அறுவடை விழாவின்போது அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அறுவடை நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
 
இந்நிகழ்வின்போது உப உணவுப் பயிர்ச் செய்கை பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், ஒலுவில் பிரதேசத்திற்கு பொறுப்பான பயிர்ச் செய்கை ஆலோகனை வழிகாட்டல்கள் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர் வி.நிரூசன், அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி; ஏ.எச்.ஏ.முபாறக் உள்ளிட்ட விவசாத்துறை உத்தியோகத்தர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
ஒலுவில் பிரதேசத்தில் தெங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப் பகுதியில் நிலக்கடலை பரந்தளவில் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக கைவிடப்பட்டுக் காணப்பட்டு வந்த நிலப் பகுதிகளிலும், தெங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப் பரப்பிலும் உப உணவுப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்வென இப்பிரதேச மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
இரசாயன உரம், கிருமி நாசினிப் பாவனை போன்றவற்றிலிருந்து விடுபட்டு இயற்கை முறையில் உப உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் வகையில், ஒலுவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறான உப உணவு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
நிலக்கடலை அறுவடையினைத் தொடர்ந்து ஒலுவில் பிராந்தியத்தில் வீட்டுத் தோட்டச் செய்கைகள் மற்றும் உப உணவு உற்பத்திக்கான ஆலோசனைகளும் துறைசார் அதிகாரிகளால் இதன்போது வழங்கப்பட்டதுடன், இப்பயிர்ச் செய்கையின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்  தேவைகள் குறித்தும் அதிகாரிகளால் கேட்டறியப்பட்டன. அத்தோடு பல்வேறு வீட்டுத் தோட்டங்கள் மற்றும் உப உணவுச் செய்கைகள் போன்றன விவசாயத் துறை அதிகாரிகளால் பார்வையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts