பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகள் இன்னும் சித்திரவதை: ஆனந்தசங்கரி

பயங்கரவாத தடைச் சட்டத்தை காரணம் காட்டி ஏன் இன்னும் தமிழ் அரசியல் கைதிகளை துன்புறுத்துகின்றீர்களென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பில் சுமந்திரனை கொலை முயற்சி செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்தித்தேன்.

குறித்த கைதிகள் மிக நீண்ட காலமாக சிறையில் வாழ்கின்றனர். அத்துடன் அவர்கள் சட்டம் தொடர்பில் அதிகம் அறிந்துள்ளார்கள்.

மேலும் கைதிகளாக உள்ளவர்கள் நீண்ட காலமாக இருந்தால் அவர்கள் ஒருவாரம் வீடு சென்று திரும்புவதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஆனால் அதை தமிழ் அரசியல் கைதிகள் அனுபவிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தை வைத்துக்கொண்டு இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் துன்பப்படுத்துகின்றார்கள்

இந்நிலையில் சுமந்திரன், சம்பந்தன், பிரதம அமைச்சர், நீதி அமைச்சர் என பலருடன் கூடி பேசினர். ஆனால் அங்கு தீர்மானம் எடுக்க முடியவில்லையென கூறுகின்றனர்.

இவ்வாறு அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்மானத்தை எடுக்ககூடிய முக்கியஸ்தர்கள் அவ்விடத்தில் இருந்தபோதும். ஏன் உங்களால் தீர்மானம் எடுக்க முடியவில்லை. பிரிதொரு திகதியிடப்பட்டு நாள் குறித்து செய்வதற்கு இது ஒன்றும் காளிகோவில் விழா அல்ல. திருமண சடங்குகளோ அல்ல.

அப்பாவிகளின் உயிரோடு சம்மந்தப்பட்டது. இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாத கலந்துரையாடல்களில் ஏன் ஈடுபடுகின்றீர்கள்.

இதேவேளை சிலரது சுய நோக்கத்திற்காக சுமந்திரனை கொலை செய்ய வந்ததாக கூறி, சில தமிழ் கைதிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் சுமந்திரனின் மனச்சாட்சிக்கு தெரியும். அவரை கொலை செய்ய வந்தார்களா என்றும் அச்சுறுத்தல் இருந்ததா என்பதும்.  அவருக்கு தெரியும்.

கொழும்பிற்கு தமது சொந்த வேலைகளுக்காக சென்றவர்களை இவ்வாறு கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். அவர்கள் பிணையினைமீறியிருக்கவும் இல்லை.

எனவே சுமந்திரன் அவர்களை நான் வேண்டுவது. இவ்வாறு கொலை முயற்சி என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்கு அங்கு சட்டத்தரணிகளோ, உறவினர்களோ இல்லை. அவர்களை பிணை விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு முதலில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts