யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்துவரும் தவணைகளில் விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் முடிவுறுத்தப்பட்டு வழக்கு ஆவணங்கள் மேல் நீதிமன்ற நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
11 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐவரும் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்கள் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டனர்.
குறித்த ஐவரில் மூவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று அறிக்கையிட்டனர்.
ஏனைய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் குற்றப் பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.