புதிய அரசியல் யாப்பு காணாமல் போய்விட்டது! கடும் விசனம் தெரிவித்த அமைச்சர்!

புதிய அரசியல் யாப்பு காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க மற்றும் சவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தனது அமைச்சின் கீழ் உள்ள காணாமல் போனோர் அலுவலகத்தில் அதுகுறித்து முறையிட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சியினரும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த விடாது இறுதி நேரத்தில் காலை வாரியதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள தேசிய நல்லிணக்க மற்றும் சவாழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மனோ இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடடாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது தொடர்பிலும் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ச இன்று இரட்டைக் குடியுரிமைக்கு சொந்தக்காரர். எவ்வாறாயினும் கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே இருப்பதாக மஹிந்த – கோட்டவாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மனோ கணேசன், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளும், ஏனைய முற்போக்கு சக்திகளும் இணைந்து உருவாக்கவுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் தாங்கள் சிறந்த தலைவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கமைய தங்களது வேட்பாளருக்கு கடும்போட்டியை வழங்கக்கூடிய வேட்பாளராக இருக்கும் கோட்டாபய ராஜபக்சவே தாமரை மொட்டுக் கட்சி என்றழைக்கப்படும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதையே தான் விரும்புவதாகவும், அவ்வாறான கடும் போட்டியுடன் கூடிய வெற்றியே நிலைத்திருக்கும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.


Related posts