பெருந்தேசியவாதக் கட்சிகளினுடைய முகமூடிகளைக் களைவது தமிழ் மக்களின் கடமை

அரசு சார்ந்த தேசிய கட்சிகளாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்களும், தேசியக் கட்சிகளைத் தங்களுக்குப் பின்னணியாக வைத்திருப்பவர்களும் பெருந் தேசியவாதத்திற்குத் துணைபோகின்றவர்களாகத் தான் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகளினுடைய முகமூடிகள் வெற்றி பெறாத வகையிலே தடுக்க வேண்டியது தமிழ் மக்களின் மக்களின் கடமை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
 
இன்றைய தினம் மட்டக்களப்பு கட்சிப் பணிமனையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஜனநாயகப் போராளிகள், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றம் ஆகியனவும் தங்கள் ஆதரவினை வழங்குகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கொள்ளை அடிப்படையிலே இரண்டு முக்கிய விடயங்களை முன்நிறுத்தி இந்தத் தேர்தலில் ஈடுபடுகின்றது. தமிழ் மக்களுக்கு நிறைவான அதிகாரத்தை வழங்கக் கூடியதான புதிய சட்டத்தினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது. மற்றையது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அடிப்படையில் நிலையான, நீடித்த அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது. இந்த அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட இருக்கின்றோம்.
 
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்த நாட்டினை முழுமையான ஒரு தேசியமாக அடையாளம் காட்டவில்லை. பெருந்தேசியவாதம் என்ற உருவாக்கத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய வாதம் என்ற ஒன்று உருவாக்கப்படும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த வகையில் நாங்கள் தமிழ்த் தேசியத்தை முன்நிறுத்தியவர்களாக இருக்கின்றோம்.
 
வடக்கு கிழக்கிலே எமது தமிழ்த் தேசியத்தின் நில அடையளத்துடன் கூடிய தமிழ்த் தேசியத்தையும், இலங்கையில் எல்லா இடங்களிலும் பரந்து வாழுகின்ற மலையக மக்கள் ஏனைய தமிழ் மக்கள் எல்லோரையும் சேர்த்ததாக எமது தமிழ்த் தேசியம் அமைகின்றது.
 
பிரிக்கப்படாத, பிளவுபடாத நாட்டுக்குள்ளே பிராந்தியத்திற்கு அதிகாரங்கள் வலியுறுத்தப்பட்ட திரும்பப் பெறாத வகையிலான அதிகாரங்களைக் கொண்டதான ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை நாங்கள் முன்னைய ஆட்சிக் காலங்களில் எடுத்திருக்கின்றோம். கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்பு வரைபு வரைக்கும் கொண்டுசென்றோம். தற்போது பாராளுமன்றம் அமைப்பதைத் தொடர்ந்து அது தொடர்பாக எங்களுடைய முயற்சிகளைத் தொடருவோம். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதும் புதிய அரசியமைப்பு தொடர்பில் அக்கறை கொள்வதாகச் சொல்லியிருக்கின்றார். அவரின் அந்தக் கருத்து தொடர்பில் வரவேற்றுக் கொண்டு வருகின்ற அரசுடன் அரசிலமைப்பு தொடர்பில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். பிரந்தியங்கள் தழுவிய அபிவிருத்தி தொடர்பிலும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
 
வழமை போல அரசு தமிழ் மக்களைப் புறக்கணிக்கின்ற வகையிலேயான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின் அது தொடர்பில் இருக்கின்ற களங்களில் எல்லாம் எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரசின் இவ்வாறான பாராபட்சத்தினைத் தடுப்போம். இததைவிட மேலதிகமாக எங்களுடைய புலம்பெயர் சகோதரங்களிடம் இருந்து பெறுகின்ற வளங்களை அடிப்படையாகக் கொண்டு எமது பிராந்தியங்களில் நீடித்து நிலைக்கும் வகையில் சிறிய அளவிலான எமது பிராந்தியங்களுக்கு ஏற்றதான அபிவருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நாங்கள் திட்டங்களை மெற்கொண்டுள்ளோம். எமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை முறையான வகையில் திறமை மற்றும் விகிதாசார அடிப்படையில் பெற்றக் கொடுப்பதற்கு நாங்கள் முனைப்புக் காட்டுவோம்.
 
இன்றைய தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமாக விமர்சிக்கப்படுகின்றது. விநோதம் என்னவென்றால் எங்களை விமர்சிக்கின்ற அனத்துக் கட்சிகளும் தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகள் பற்றி பகிரங்கப்படுத்தாமல் எங்களுடய நடவடிக்ககளை விமர்சிப்பதை மட்டுமே தங்கள் கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்த் தேசியத்தயும் நேசிக்கின்ற சில கட்சிகள் தவிர்ந்த ஏனைய எங்களுடைய மட்டக்களப்பிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி போட்டியிடுகின்ற அரசு சார்ந்த தேசிய கட்சிகளாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் அல்லது தேசியக் கட்சிகளைத் தங்களுக்குப் பின்னணியாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பெருந் தேசியவாதத்திற்குத் துணைபோகின்றவர்களாகத் தான் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். களமிறக்கப்பட்டிருக்கின்ற கட்களின் பிராந்தியத் தலைவர்கள் தலைவர்கள் அல்ல. தங்கள் உண்மையான தலைவர்கள் யார் என்பதை அவர்கள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் அவர்களின் தலைவர்கள் பெருந்தெசியவாதத்தின் தலைவர்கள். மொட்டாக இருந்தாலும் சரி வள்ளமாக இருந்தாலும் சரி அவர்கள் ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மஹிந்த அவர்களையே தலைவர்களாகக் கொண்டவர்கள். அவர்களின் கொள்கைகளைத் தான் இங்கு நிலை நாட்ட வேண்டும். ஆனால் முகமூடி போட்டு வந்திருக்கின்றார்கள். இதனை மக்கள் மிக நுணுக்கமாகக் கவனமாக ஆரய வேண்டும்.
 
ஜனாதிபதி படிப்படியாக நிருவாகம் உட்பட அனைத்து துறைகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்துகின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருகின்றார். இதில் மிக முக்கியமாகக் குறிப்பிடுவது தொல்லியல் திணைக்களம் தொடர்பில் கிழக்கில் அமைத்திருக்கின்ற ஜனாதிபதி செயலணி. முழுமையாக பெரும்பான்மை இன அதிகாரிகளைக் கொண்ட செயலணியாகவே இது இருக்கின்றது. இதனை நாங்கள் முற்றாகவே எதிர்க்கின்றோம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாங்கள் ஒருமித்துச் செயற்படுகின்றோம். இன்றைய தேர்தல் முறையிலே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் எமது மக்களின் குரல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைந்தால் எமது குரல் பலவீனமடையும். எமது தலைவர் சொன்னது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்கப்பட்டால் தமிழ் மக்கள் அநாதைகளாகி விடுவார்கள் என்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு அனைவரும் சென்று வீட்டுக்கு கூடுதலாக வாக்களிக்க வேண்டும்.
 
கூடுதலான வாக்குவீதத்தினை தமிழர்கள் வழங்குவதன் மூலம் கோட்டபாய ராஜபக்ச அவர்களைத் தலைவராகக் கொண்டு இங்கு கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே வேறு முகமூடிகளைக் கொண்டு போட்டியிடுகின்ற சிங்கள பெருந்தேசியவாதக் கட்சிகளினுடைய முகமூடிகள் வெற்றி பெறாத வகையிலே தடுக்க வேண்டியது தமிழ் மக்களின் மக்களின் கடமை. அவ்வகையிலே 04 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இருக்கின்ற இந்த அருமையான வாய்ப்பினைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.  வருகின்ற ஆகஸ்ட் 05ம் திகதி நடைபெற இருக்கின்ற தேர்தலின் முடிவுகள் இந்தச் செய்தியைச் சொல்லுகின்ற அதேவேளை வடக்கு கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பெற்றிருந்த 16 ஆசனங்களை விட அதிகமான ஆசனங்களைப் பெற்று வெல்லும் என்று தெரிவித்தார்.

Related posts