பொங்கல் விழா எல்லா மக்களுக்குமுரியது. கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு.

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய மாகாண தைப்பொங்கல் திருவிழா(23) நாவிதன்வெளி மத்திய முகாம் ஸ்ரீ முருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா பிரதம அதிதியாாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
கிழக்கு மாகாணம் எல்லா மாகாணங்களில் இருந்தும் வேறுபட்ட மாகாணமாகும். இங்கு தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று மூவின மக்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று இந்த தைப்பொங்கல் திருவிழா நடைபெறுகின்ற நாவிதன்வெளி மத்திய முகாம் பிரதேசமும் மூவின மக்களும் வாழுகின்ற பிரதேசமாகும். அதனால் இங்கு இந்த விழா நடைபெறுவதையிட்டு மகிழ்சியடைகிறேன்.
 
தைப்பொங்கல் திருவிழாவை இந்து மக்கள் கொண்டாடி வந்தாலும் இது எல்ல இனத்தையும் மதத்தையும் சேர்ந்த மக்களுக்கும் உரிய ஒரு விழாவாகும். இயற்கையோடு ஒன்றித்து வாழும் மனிதன் இந்த இயற்கைக்கு நன்றிக்கடன் சொல்லும் விழாவாக பொங்கல் விழா காணப்படுகின்றது. உழவர் தமது விவசாயத் தொழிலிலே பாரம்பரிய கலாசார பண்பாடுகளை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை இன்றைய நாள் ஞாபகப்படுத்தி இருக்கின்றன.
 
நவீன கலாசார பண்பாடுகள், தொழில்நூட்ப வளர்ச்சி போன்றன எமது பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கின்றன. எனினும் இது போன்ற பொக்கல் விழாக்கள் எமது பாரம்பரிய கலாசார விழுமியங்களை பாதுகாக்கின்றன என்று தெரிவித்தார்.
 
நிகழ்வில் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் வயல் நிலத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டு மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பெண்களின் பங்குபற்றுதலுடன் கோலமிட்டு நெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு நடைபெற்றன.
 
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன், நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆகியோரது அழைப்பின் பெயரில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீஸன், ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, நாவிதன்வெளி பிரதி தவிசாளர் ஏ.கே.அப்துல் ஸமட், மாகாண மற்றும் மாவட்ட அரச உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சர்வமத தலைவர்கள், கிராமமட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Related posts