பொருட்கள் பதுக்கல்கள் தொடர்பில் மாநகரசபையூடாகவும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும்… (மட்டு மாநகர முதல்வர் – தி.சரவணபவன்)

பொருட்கள் பதுக்கல்கள் தொடர்பில் மிக விரைவில் மாநகரசபையூடாகவும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அது மட்டுமல்லாது, சுகாதாரப் பிரிவினர், நுகர்வோர் அதிகாரசபை, விலை மதிப்பீட்டுத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து குழு சோதனை நடவடிக்கை ஒன்றினையும் திட்டமிட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

 
 ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
அண்மையில், மாநகரசபையில் பலருக்குக் கொவிட் தொற்று ஏற்பட்டமையினால் மாநகர சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. உண்மையில் எமது மண்டபத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றது. அதன் பின்னர் தான்; அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள். அதனை நான் நடாத்த வேண்டாம் என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். ஆனால் அது செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் மாநகரசபையில் தொற்று ஆரம்பித்தது. சுமார் 35 பேர் வரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டார்கள். தற்போது தொற்று நீக்கப்பட்டு எமது சேவைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் பொது மக்கள் மிக விழிப்பாக தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
 
தற்போது சுகாதார சுற்று நிருபம் என்பது ஆளுங்கட்சியினரைப் பொருத்த வரையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியான விடயம். ஆளுங்கட்சியின் அரசியற் பிரமுகர்கள் பல நிகழ்வுகளைச் செய்கின்றார்கள். அதற்குரிய நடவடிக்கைகளைக் கொவிட் செயலணி தான் எடுக்க வேண்டும்.
 
தற்போது இடம்பெறுகின்ற பொருட்களின் பதுக்கல்கள் தொடர்பில் எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி வருகின்றோம். மிக விரைவில் மாநகரசபையூடாகவும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அது மட்டுமல்லாது, சுகாதாரப் பிரிவினர், நுகர்வோர் அதிகாரசபை, விலை மதிப்பீட்டுத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து குழு சோதனை நடவடிக்கை ஒன்றினையும் திட்டமிட்டுள்ளோம்.
 
தற்போதைய நிலையில் தொற்றில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே ஒரு வழியாக இருக்கின்றது. அனைவரும் தவறாது தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசியின் வகை தொடர்பில் பார்க்காமல் அந்த அந்த மாவட்டங்களுக்குக் கிடைக்கும் தடுப்பூசி வகைகளை செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts