மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு “சாய்ப்புச் சட்டம்” தளர்த்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் 
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு “சாய்ப்புச் சட்டம்” தளர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற வர்த்தக நிலையங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சாய்ப்புச் சட்டமானது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் புதன்கிழமை(12)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் :-

இதன்படி எதிர்வரும் நத்தார், புதுவருடப் பிறப்பு மற்றும் தைப் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு வியாபார நிலையங்களின் விற்பனை அதிகரிப்புக் காலம், மற்றும்  நுகர்வோரின் கொள்வனவு வசதிகள் போன்றவற்றினைக் கருத்திற் கொண்டு சகல வியாபார நிலையங்களுக்கும் சாய்ப்புச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இச்சாய்ப்புச்சட்டம் எதிர்வரும்  15.12.2018ந் திகதி முதல் 15.01.2019ந் திகதி வரையான காலப் பகுதிக்குள் வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களது கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக வர்த்தக சங்கத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், இச் சாய்ப்புச் சட்ட நடைமுறையானது மீண்டும் எதிர்வரும் 16.01.2019ந் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனத்தெரிவித்தார்.

Related posts