மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரொனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் எழுந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் எந்த ஒரு கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார்.
 
 
மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் (12) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
 
இதனைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது தொடர்பாக அமுலில் இருந்த கட்டுப்பாடு குறைக்கப்பட்டு ஒருதடவையில் 25 நபர்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட இச்செயலனி அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிமுறைகளை முற்றாக கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
 
மேலும் அக்கரைப்பற்று, கல்முனைப் பிரதேசங்களில் அதிகரித்துவரும் கொரோனா நோய் காரணமாக அப்பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பிற்கு கடமைக்கு வரும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தொடர்ந்து வீட்டிலிருந்து கடமையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
 
 
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ அதிகாரி மேஜர்  கே.ரீ.எம். தர்மவர்தன, பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அச்சுதன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

Related posts