மட்டக்களப்பு மாவட்ட சோளன் பயிர் செய்கையில் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புளுத்தாக்கத்தின் பரவல், கட்டுப்படுத்த விவசாயப்பிரிவு களத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 738 கெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புளு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் களத்தில் நின்று துரித நடவடிக்கை எடுத்துவருவதாக மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். 
 
 
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இம்முறை பெரும்போக விவசாயத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளன் பயிற்செய்கை மேற்கொள்வதற்கான இலக்கைக் கொண்டு விவசாய நவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. கடந்த டிசம்பர் 15 வரையான காலப்பகுதியில் 1214 ஹெக்டேயர் சோளன் விவசாயிகளால் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 738 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புளு தாக்கத்திற்கான பரவல்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 தொடக்கம் 61 வீதமான தாக்கங்கள் இலைகளிலும், பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.
 
 
இவற்றைக் கட்டுபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவத் திட்டம், இயற்கை முறை மற்றும் இரசாயன கிருமி நாசினி விசிறல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் மேற் கொண்டு வருகின்றது. 
மேலும் விவசாயத் திணைக்களத்தினால் இந்நோயினைக் கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் ஒன்று அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. இது பௌலிஜன் எனும் திரவ மருந்தாகும். இதனை நோய்த்தாக்கமுள்ள பயிர்களில் புளுக்களில் படும்படியாக விசிறப்படும்போது நோயினை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும். 
 
 
இதுதவிர இந்நோய்த்தாக்கத்தினை ஆய்வு செய்து முற்றாகக் கட்டுப்படுத்த கிழக்குப் பல்கலைக்கழக பூச்சியியலாளர் டாக்டர் நிரஞ்சனா, கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய பூச்சியியலாளர் டாக்டர் அரசசேகரி, பத்தளகொட நெல் ஆராச்சி நிலைய பூச்சியியலாளர் டாக்டர் சொர்னா ஆகியோர் தலைமையில் மூன்று விசேட குழுக்கள் தாளயடிவட்டை, புல்லுமலை, கடடியனாறு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
 
இதன்போது விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர்கள், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழினுட்ப உத்தியோகத்தர்களுக்கு இந்நோயத்தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு விழப்பூட்டல் செய்து, கட்டுப்பாட்டு செயன்முறைகளைக் கற்றுக் கொடுக்கும் பயிறசிகளும் வழங்கப்பட்டுள்ளது.
 
 
இது தொடர்பாக விவசாயிகளுக்கான அறிவூட்டல்கள் வழங்கள், செயன்முறைப் பயிற்சி வழங்கள், களவிஜயங்கள், துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல், ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டல் போன்ற நடவடிக்கைகள் எமது உத்தியோகத்தர்களால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
 
 
இப்படைப்புளுத்தாக்கமானது இளம்பருவப் பயிர்களுக்கு அதிகமாக காணப்படுவதுடன், முதிர் பருவ பயிர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts