மத ஸ்லங்களின் பரிபாலன சபையினருக்கு சிவப்பு எச்சரிக்கை

அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயினை முற்றாக அழித்தொழிக்கும் விஷேட வேலைத்திட்டமொன்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதற்கமைவாக அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மத ஸ்தலங்களின் சுற்றுப் புறச்சூழலை சுத்தமாக்கி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருவதுடன், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கொண்டுள்ள மத ஸ்தலங்களின் சூழலை வைத்திருந்த அதன் பரிபாலன சபையினருக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
 
இவ்வேலைத் திட்டத்தில் சுகாதாரத் துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்புப் பிரிவினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தின் மூலம் மத ஸ்தலங்கள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களின் சுற்றுப் புறச் சூழல், வடிகான்கள், கால்வாய்கள், நீரேந்து பிரதேசங்கள் போன்றன சுத்தப்படுத்தப்பட்டு டெங்கு நுளம்புகள் உண்டாகும் சூழலும் இடங்களும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.
 
வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருவதனால் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரை டெங்கு நோயின் தாக்கம் இப்பிரதேசத்தில் அதிகரித்து வருவதுடன், இவ்வருடம் ஆரம்பம் முதல் இதுவரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 220 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார்.
 
அக்கரைப்பற்று மாநகர அதிகார எல்லைக்குட்பட்ட சுமார் 28 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள மத ஸ்தலங்கள் மற்றும் அதன் சுற்றுப் புறச் சூழல் போன்றன சுகாதாரத் துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகும் சூழலை கொண்டிருந்த மத நிறுவனங்களின் பரிபாலன சபையினருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், குறித்த மத ஸ்தலங்களின் நம்பிக்கையாளர் சபையினர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு டெங்கு நோய் தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இதன்போது இடம்பெற்றன.
 
அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேச மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இப்பிரதேசத்தில் விஷேட டெங்குக் கட்டுப் பாட்டு வேலைத்திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts