மன்னார் எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளன

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 நாட்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 122 ஆவது நாளாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை. மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்துள்ளது. அவற்றை சீர் செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இன்று மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் மாதம் 30 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts