மாகாணக் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களாக கல்வி நிருவாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்

மாகாணக் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களாக இலங்கை கல்வி நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது விடயமாக ஜனாதிபதி, பிரதமர், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
 
கல்வி நிருவாகம் வேறு, பொது நிருவாகம் வேறு என்பதை அறியாதது போல் கல்வி நிருவாகத்தை நடாத்தி வரும் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளால் கல்வி நிருவாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் சிக்கலான விடயமாகும்.
 
இதனைக் கருத்தில் கொண்டு ஆகக்  குறைந்தது மாகாண மட்டத்திலாவது மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களாக இலங்கை கல்வி நிருவாக சேவையின் சிரேஸ்ட தர அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களாயின் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவாக அமையும். அல்லது பிரதி கல்விச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, கல்வித்துறையில் கடமையாற்றும் ஆசிரியர், அதிபர், இலங்கை கல்வி நிருவாக சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை என்பவற்றின் நிருவாக நடவடிக்கைகள் முழுவதுமாக அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ற விதத்தில் ஆளணி அனுமதி மறுசீரமைக்கப்படல் வேண்டும்.
 
மாகாண கல்வித் திணைக்களத்தில் பொது நிருவாகத்திற்கென இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த அதிகாரியொருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கையில் மாகாணக் கல்வி அமைச்சுக்களின் கல்வி நிருவாகத்திற்கென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது நியாயமானதொரு கோரிக்கை என்பதை எவரும் மறுக்க முடியாது.
 
1993/1994 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களாக இலங்கை கல்வி நிருவாக சேவை சிரேஸ்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இக்காலப் பகுதியில் கல்வித்துறை உத்தியோகத்தர்களது பிரச்சினைகள் இலகுவாகவும், சுமுகாகவும் தீர்க்கப்பட்டிருந்தன. ஆனால் மாகாண கல்வி அமைச்சு செயலாளர்களாக இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் கல்வித்துறை உத்தியோகத்தர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளாக மாற்றமடைந்து காணப்படுகின்றன.
 
மாகாண மட்டத்திலேயே 70 சதவீதமான கல்வித்துறை உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதனால் மாகாண கல்விச் செயலாளர்களாக அல்லது பிரதிக் கல்விச் செயலாளர்களாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Related posts