ரிசாத் பதியுதீனின் கைது என்பது சிறுபாண்மை சமூகத்தின் மீது போடும் கீறலாகும் : சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் கண்டனம்

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீனின் குடும்பத்திற்கு எதிரான அரசியலை அரசாங்கமும், கடும்போக்கு அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதானது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்றாகவே நோக்க வேண்டி உள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
 
 
எந்தவிதமான குற்றமும் அவர் மீது இல்லாதபோதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு பொறுப்பான அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தின் போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்படுவதற்கு இடம்பெயர்ந்த மக்களை பஸ் வண்டிகளில் அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டினை சுமத்தி இருக்கிறார்கள்.
 
கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலியான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தியிருந்த போதிலும், அவர் எந்த விதமான குற்றச் சாட்டும் இல்லாதவர் என நிரூபணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் நினைத்திருந்தால் மஹிந்த அரசுக்கு முட்டுக் கொடுத்து இன்று கோட்டையிலே குடியிருந்திருக்கலாம். ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நீதியாக நின்று கொண்டதால் இன்று அவரும் அவருடைய குடும்பமும் பழி வாங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
 
இந்த நிலையிலேயே இன்று அவரை கைது செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது காட்டமானதாகும். இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை மக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றன கட்சியொன்றின் தலைவரை வேண்டுமென்றே கைதுசெய்ய எடுக்கும் எத்தனமானது அச்சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்படும் கீறலாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts