வடகிழக்கில் இந்தியா அபிவிருத்திகளை மேற்கொண்டால் சீனாவின் தேவை இருக்காது: வியாழேந்திரன்

வடகிழக்கில் இந்தியா அபிவிருத்திகளை மேற்கொண்டால் சீனாவின் தேவை எமக்கு இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கிலும், மலையகத்திலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் கிழக்கில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் போதுமானதாக இருக்கவில்லை.

இது தொடர்பில் அண்மையில் இந்திய தூதுவரை மட்டக்களப்பில் சந்தித்தபோது எடுத்துக் கூறியிருக்கின்றோம்.கொழும்பில் பல வேலைத்திட்டங்களை சீனா செய்துகொடுத்துள்ளது.

அங்கு அதனை செய்துகொடுத்துவிட்டு அதற்கு பரிகாரமாக மட்டக்களப்பில் 6500 ஏக்கர் காணியை சீனாவுக்கு கரும்பு செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எமது நேசநாடான இந்தியா இங்கு வந்து வேலைத்திட்டங்களை செய்யும்போது சீனா ஏன் இங்குவரவேண்டும்.

எனவே இந்தியா முன்வந்து வடகிழக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது இங்கு சீனா வரவேண்டிய அவசியம் இருக்காது என்பதையும் நாம் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts