வடக்கில் சட்டவிரோதக் குடியேற்றங்களை அவதானிக்க புதிய செயலணி!

வட.மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இனப்பரம்பலை மாற்றக்கூடிய குடியேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக 12 பேர் கொண்ட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக வட.மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாட்டங்களில் இடம்பெறும் இனப்பரம்பலை மாற்றக்கூடிய வகையிலான குடியேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) வட.மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், “வடமாகாணத்தில் இடம்பெறும் இனப்பரம்பலை மாற்றக்கூடியதான குடியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகாவலி அமைச்சர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்படும்.

இந்த தீர்மானத்தின் பிரகாரம் வடமாகாண சபை சார்ந்த 8 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரையும் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts