வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள அதிகாரிகள் பிரதம செயலாளர்களாக நியமனம்;தென்கிழக்கு கல்விப் பேரவை பலத்த கண்டனம்

தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக தமிழ் மொழி புரியாத சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதானது அரசாங்கத்தின் இனவாதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என தென்கிழக்கு கல்விப் பேரவை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து பேரவையின் தவிசாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
 
இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் கடமையில் உள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களாக சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருகின்றனர்.
 
இம்மாகாணங்களின் பிரதம செயலாளராக கடமையாற்ற தமிழ் பேசுவோர் எவரும் தகுதியில்லை என்பது போல் ஜனாதிபதியின் தீர்மானங்கள் அமைந்துள்ளன. எந்தளவுக்கென்றால் ஏற்கனவே வழங்கப்பட்ட மீள் ஒப்பந்த நியமனம் முடிவுறுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி துஷித வனிகசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரிகள் சேவை மூப்பு பட்டியலில் தமிழ் பேசும் அதிகாரிகள் பலர் கடமையில் உள்ள நிலையிலேயே இந்த அநியாயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
 
அண்மைக்காலமாக எமது நாட்டு ஜனாதிபதி, தான் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் மொழி அறவே புரியாத சிங்கள அதிகாரிகளை அவர் பிரதம செயலாளர்களாக நியமித்துள்ளார்.
 
நடைமுறையில் உள்ள இலங்கை அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மாகாணங்கள் எனவும் இந்த மாகாணங்களின் அரச கரும மொழியாக தமிழ் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்விரு மாகாணங்களிலும் நீதிமன்ற மொழி கூட தமிழ் மொழியாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால் மத்திய அரசாங்கம், அரசியலமைப்பை முற்றாக புறந்தள்ளி, தமிழ் மொழி பேசும் மக்களை நிந்திக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பிரதம செயலாளர் பதவி 2012 ஆம் ஆண்டு முதல் பறிபோன நிலையில், வடக்கு மாகாணத்திலும் தமிழ் பேசும் பிரதம செயலாளர் பதவி 2021 ஆம் ஆண்டு முதல் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.
 
இது குறித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநித்துவப்படுத்தும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
 
அண்மையில் இந்தியாவில் மிசோரம் மாநிலத்திற்கு மிசோரம் மொழி தெரியாத ஒரு அதிகாரி பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்டபோது அங்கு ஏற்பட்ட எதிர்ப்பலைகளை அடுத்து மிசோரம் மொழி தெரிந்தவர் பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்டமையை எமது தமிழ் பேசும் அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்- எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்கப்பட்டிருக்கிறது.
 

Related posts