சிறுபான்மைச் சமூகங்களின் உணர்வுகளுக்கு  இவ் அரசாங்கம்  சிறிதளவேனும் மதிப்பளிக்கவில்லை என்பதற்கு யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்பு மேலும் ஒரு  கறை படிந்த வரலாற்றுப் பதிவாகும் 
மட்டக்களப்பு மாவட்ட சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத் தலைவர் ஏ .எல் .எம் .மீராசாகிபு 
 
அனைத்து இன மக்களும்  வாழுகின்ற இந்த நாட்டில் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக இந்த அரசாங்கம் சென்றுகொண்டிருப்பது மனதுக்கு பெரும் வேதனை அளிப்பதுடன் அண்மையில் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் நிறுவப்பட்ட  நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்களின் உணர்வுகளை எள்ளளவேனும் இந்த அரசாங்கம்  மதிக்கவில்லை என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு கறைபடிந்த வரலாற்றுப்  பதிவாகும் என  மட்டக்களப்பு மாவட்ட சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத் தலைவர்  தேசமானி  ஏ  .எல் .எம் .மீராசாகிபு தெரிவித்தார் .
அவர் மேலும் இது விடயமாக கருத்து தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியானது வெறுமனே ஒரு நினைவுச் சின்னம் கிடையாது  முள்ளிவாய்க்காலில் கொடூரமான முறையில் மருணித்த  பொதுமக்களின் நினைவாக அக்குடும்பங்களின் உறவில் பரிணமித்த மாணவர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளினால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு நினைவுத் தூபியாகும்.இதனை இடித்திருப்பது எவராலும் ஏறுக்கொள்ள முடியாத  கண்டிக்கத் தக்க ஒரு விடயம் என்பதுடன்   இறந்து போன உறவுகளை மறக்கமுடியாமல் அதன் வடுக்கள் நிறைந்த காயங்களுடன் வாழுகின்ற மாணவர்களின் உணர்வுகளை சிதறடித்தது  மாத்திரமின்றி  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒரு  செயலாகவே இதனை நான் பார்க்கின்றேன்.தனக்கு சரி என்றதை சரி என்று நினைத்து கொரோனாவினால் மருணிக்கும் முஸ்லீம் மக்களது ஜனாசாக்களைக் கூட அடக்கம் செய்ய அனுமதிக்காது எரிக்கும் விடயத்தில்  உண்மைக்கு புறம்பான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு அவர்கள் மனதில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதேசமயம் தமிழ் உறவுகளின் நினைவலைகளின் நினைவுச் சின்னங்களை துவம்சம் செய்யும் நடவடிக்கைகளில் இவ்வரசாங்கம் நேரடியாகவே களமிறங்கி இருப்பதனை ஊடகங்கள் காட்சிப் படுத்தும் காணொளிக் காட்சிகள் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.இச்சம்பவங்களை நாம் பார்க்கின்றபோது வேலியே பயிரை மேய்வதுபோல் உள்ளது ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ வேண்டும் என்பதே  அநேக சிங்கள மக்களின் அபிலாசையாகும் அவர்களைக் கூட பிழையான புரிந்துணர்வுகளுக்கு வழிநடத்திச் செல்லும் செயற்பாடாகவே நாட்டில் பல சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருவது இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல   .நாட்டில் சனாதிபதியாக இருப்பவர் அனைத்து மக்களையும் தழுவி வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.ஒரு சமூகத்தினை அடக்கி ஒடுக்கி பெரும்பான்மை என்கின்ற மாய வலையில் சிக்கி எம்மவரை நிந்தித்து பெரும்பான்மைச் சமூகத்தை  மகிழ்விக்க வேண்டும் என்று  மேலும் மேலும்  இவ்வரசாங்கம் அவர்கள் காலம் முழுவதும் பயணித்தால் அப்பயணம் இடைநடுவில் அஸ்தமிக்கும் வாய்ப்பினை எல்லாவற்றிற்கும் பொதுவான  இறைவன் அப்படியான ஒரு நிலைமையினை .உருவாக்குவார்.  எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
 

Related posts