34 வருடக் கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெறும் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி மகாலட்சுமி செல்வராசா

(சா.நடனசபேசன்)

சம்மாந்துறைகல்வி வலயத்தின் விஞ்ஞானப்பாடஉதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி மகாலட்சுமி செல்வராசா தனது 34 வருடக் கல்விச்சேவையில் இருந்து 26 ஆம் திகதி புதன்கிழமை ஓய்வுபெறுகின்றார்.

இவர் கல்முனை நற்பட்டிமுனைக் கிராமத்தில் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1989 ஆம் ஆண்டு  விஞ்ஞானப்பாட பட்டதாரி ஆசிரியராக கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் தனது கல்விப்பணியினைத் தொடங்கினார்.

இவர் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் பயின்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி (விவசாயம்) சிறப்புப் பட்டத்தினையும் பெற்றுள்ளார், பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை வழிகாட்டல் ஆகிய பட்டங்களையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமாவினையும் பெற்றதுடன் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1 ஆம் தர அதிபராகவும் தற்போது இருக்கின்றார்.

1989 ஆம் ஆண்டில் நியமனம் பெற்றதில் இருந்து தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின்  உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆசிரியராகவும் ஒழுக்காற்றுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியதுடன் பல மாணவர்கள் உயர்கல்வி பெறவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு சம்மாந்துறை கல்வி வலயத்தில்  விஞ்ஞானப்பாடத்திற்கான  உதவிக் கல்விப்பணிப்பாளராக நியமனம் பெற்று  வலயத்தின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்.

சம்மாந்துறை கல்வி வலயத்தின் விஞ்ஞானப்பாடத்தின்  அடைவுமட்ட வளர்ச்சிக்கும்  உயர்ச்சிக்கும் அயராது பாடுபட்டதுடன் சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஏழு வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்குக் கீழ் கடமையாற்றியதுடன் அனைவராலும் நன்மதிப்பினைப் பெற்ற ஒருவர்.  23 வருடமாக உதவிக்கல்விப்பணிப்பாளர் சேவையின் போது மாகாணம், வலயமட்ட வளவாளராகவும் செயற்பட்டதுடன் விஞ்ஞானப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களுக்கான வெளிநாட்டு புலமைப்பரிசில் பெற்று இந்தியாவில் பயிற்சியினைப்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts