வாணிவிழா தினங்களில்கருத்தரங்கு:இடைநிறுத்தம்! கல்முனைவலயக்கல்விப்பணிப்பாளர்ஜலீலின்அதிரடி நடவடிக்கை

காரைதீவு நிருபர் சகா
 
நவராத்திரி விழாக்காலத்தில் குறிப்பாக பாடசாலைகளுக்கு மிகமுக்கியமான வாணிவிழா தினங்களில் கல்முனைவலயத்தில் ஆசிரியர்களுக்காக நடாத்தப்படவிருந்த  கருத்தரங்கு உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கைஆசிரியர்சேவை வகுப்பு 2(1) இலிருந்து தரம் 1க்கு பதவியுயர்வு பெறுவதற்கான செயலமர்வு எதிர்வரும் 5ஆம் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடாத்த கல்முனை வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திட்டமிட்டு அழைப்புக்கடிதங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்தது.
 
வாணிவிழா தினங்களாகிய மேற்கூறப்பட்ட 5(சனி) 6(ஞாயிறு) 7(திங்கள்)ஆகிய தினங்களில் இந்து ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் முக்கிய சமயச்சடங்கில் பங்குபற்றவேண்டியிருப்பதால் இதனை ஒத்திவைக்கஉதவுமாறு  ஆசிரியர்கள் ஆசிரியர்தொழிற்சங்கப்பிரதிநிதியும் இந்துசமயபிரதிநிதியுமான வி.ரி.சகாதேவராஜாவிடம் முறையிட்டனர்.
 
தமிழ்மக்கள்  குறிப்பாக இந்துமாணவர்கள் ஆசிரியர்கள் கல்வித்தெய்வமாம் வாணியை துதித்து வணங்கும் இக்காலப்பகுதியில் இக்கருத்தரங்கை நடாத்துவது முறையல்ல. குறித்த 3தினங்களும் அவர்கள் பூரணமாக பாடசாலைகளை அலங்கரித்து ஊர்வலம் நடாத்திபல சமயம்சார் கலைநிகழ்ச்சிகளை நடாத்தி பலவித நைவேத்தியம் படைத்து பெரு விழாவாகக்கொண்டாடுவது வழக்கம்.  
 
அத்தகைய வாணிவிழாக்காலப்பகுதியில் கருத்தரங்கு நடாத்துவதென்பது  இந்து மாணவர் ஆசிரியர்களின் மதசுதந்திரத்தை மறுப்பதாக அமையும்.எனவே அதனை ஒத்திவைக்குமாறு பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜாகல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலிடம் தொடர்புகொண்டு இவ்வேண்டுகோளை விடுத்தார்.
 
பணிப்பாளர் ஜலீல்  உடனடியாக அதனை இடைநிறுத்தம் செய்து பிறிதொரு தினத்தில் நடாத்த உத்தரவிடுவதாக உறுதியளித்தார்.
இச்செய்தி இந்து ஆசிரியர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பணிப்பாளருக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர்.

Related posts