கல்முனை நீதிமன்றில் ஸஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட மூவர் ஆஜர்

சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டப் பிரதேசத்தில் சஹ்ரான் ஹாஷிமின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான மரண விசாரணைகள் நேற்று (03) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றன. 
கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியா, நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு, விசாரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
இந்த இரண்டாம் கட்ட விசாரணைகளுக்காக சஹ்ரான் ஹாஷிமின் சகோதரி உள்ளிட்ட மூவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரகசியப் பொலிஸாரினால் கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 
இதனை முன்னிட்டு கல்முனை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 
கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில், மூடிய அறையான நீதவான் சமாதான அறையில் இவ் விசாரணைகள் இடம்பெற்றன. 
இதன்போது சஹ்ரான் ஹாஷிமின் சகோதரியான மதனியா, இவரின் கணவர் முஹம்மட் நியாஸ், சாய்ந்தமருது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த எம்.எம்.நியாஸ் என்பவரின் மனைவியான அஸ்மியா ஆகியோர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். 
இந்த விசாரணைகளில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான பல்வேறுபட்ட விபரங்கள் இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 
சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகள், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதிக்கு நீதவானால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சஹ்ரான் ஹாஷிமின் பெற்றோர், இரண்டு சகோதரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts