வெள்ள அனர்த்தம் தொடர்பான விஷேட கலந்துரையாடல்

இந்நாட்டில் இன மத பேதங்கள் மேலோங்காமல் அனைத்து இனத்தவர்களையும் ஒருதாய்ப் பிள்ளைப்போல் அவரணைத்து அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாட்டிற்கமைவாக எல்லோருக்கும் பொதுவான அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார். இதனால் எம் நாட்டு மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்து வருகின்றனர் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜேவிக்ரம தெரிவித்தார். 
 
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் பிரதேச மக்களின் பாதிப்புகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் தம்பிலுவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை ‘விவசாயிகளின் எதிர்கால பசுமை உலகம் உற்பத்தி சங்கம்’ ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் ஒரே கண்கொண்டு பார்த்து மக்களின் அமைதிக்காகவும், அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும், நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சதா சிந்தித்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றார். அதற்கமைவாக மக்கள் காலடிக்குச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தொடர்ச்சியாக எம்மை அறிவுறுத்தி வருகின்றார்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பத்தினை வெறுத்து வருகின்றார். பொதுமக்களி;ன் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் செயல் வடிவில் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றார். இதற்கென நாட்டில் பல்வேறு மட்டத்தவர்களுக்கும் தேவையான நல்ல பல செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்.
 
இந்நாட்டில் பெய்து வரும் அடை மழையின் காரணமாக பலர் பல்வேறான பாதிப்புகளுக்கு இலக்காகி உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களுக்கு உதிவி செய்யும் முயற்சியில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
 
திருக்கோவில், தம்பிலுவில் போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் விவசாயத் துறை சார்ந்தும் இன்னும் பல துறைகள் மூலமாகவும் வெள்ளத்தின் மூலம் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணங்களும் கிடைக்கப் பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக அம்மக்களுக்கு உதவிகள் மேற்கொள்ளும் பொருட்டு, உடனடியாக மாவட்ட  செயலாளருக்கு நான் பணிப்புரை வழங்கவுள்ளேன்.
 
திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட நாள் தேவையாக உள்ள பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக சிலர் என்னிடம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கான திட்ட அறிக்கையினை தயார் செய்து அம்மக்கள் செயற்படுகின்றபோது நிச்சயமாக அப்பாலத்தினை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கான முயற்சிகளைச் செய்யவுள்ளேன்.
நாம் தற்காலத்தில் உண்ணுகின்றதும் அருந்துகின்ற உணவு வகைகளில் நஞ்சுள்ள இரசாயனங்கள் கலந்துள்ளதால் நம்மவர்கள் பல்வேறான நோய்களுக்கு இலக்காகி வருவதுடன் பல்வேறான பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் எமது இளம் சந்ததியினரின் வீரியம் மிக்க செயற்பாடுகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலைமையினைப் போக்கி வளமுள்ள சமுதாயமாக நமது எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டியுள்ளது என்றார்.
 
இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜேவிக்ரம கலந்து கொண்டு அனர்த்தம் தொடர்பிலான பாதிப்புக்கள் பற்றி பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
 
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களின் சேத விபரங்கள் தொடர்பிலான ஆவணங்கள் இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
 
இதன்போது திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய பிரதேசங்களில் செய்கை பண்ணப்படும் விவசாய அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டதுடன்,  அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சிறியானி விஜேவிக்ரமவின் கடந்த கால சேவையினைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் அவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Related posts