அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளதாக கூறிக்கொள்ளும் சம்பந்தன் ஐயா கன்னியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் முன் வரவில்லை?

இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்க்கு போராடும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றை பாதுகாக்க ஏன் முன் வரவில்லை?
தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்ற உறுப்பினருமான  சி.நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) கேள்வி. ஊடக அறிக்கை – 
இந்த அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளதாக கூறிக்கொள்ளும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான கௌரவ  இரா.சம்பந்தன் அவர்கள் அரசுடன் உள்ள நல்லுறவை பயன்படுத்தி திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று பெருமை மிக்கதும் இந்துக்கள் வரலாற்றுடன் ஒன்றித்து போனதுமான இதிகாச புராணங்காலத்திற்க்கு அப்பாற்ப்பட்டதுமான வரலாற்றை கொண்ட ஒரு பிரதேசத்தை, நிலத்தை தொல் பொருள் திணைக்களம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கபளீகரம் செய்ததை தடுக்க முடியாத காரணத்தை எமது மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிற்க்கு எதிராக பின்வரும் திணைக்களங்கள் செயற்பட்டு வருகின்றது
குறிப்பாக தொல் பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், கரையோர அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகளிற்கான திணைக்களம், மற்றும் வீடமைப்பு அதிகார சபை என்பனவாகும். இத் திணைக்களங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக  தமிழ்மக்களின் விவசாய நிலங்களை அபகரிப்பதும் தமிழ் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளை அபகரிப்பதும் தமிழ் மக்களின் வரலாற்று தொடர்புபட்ட புனித தலங்கள், கோயில்களில் பௌத்தமத வழிபாட்டு சின்னங்கள் உள்ளதாக கூறி, ஆலய நிலங்களை அபகரிப்பதும், தமிழ்மக்களிற்கு நன்மையளிக்க கூடிய அபிவிருத்தி திட்டங்களை கட்டிட நிர்மாணங்களை தடுப்பதும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இனப்பரம்பலை தடுக்குமுகமாக தமிழ் பிரதேசங்களில் ஊடறுத்து சிங்கள குடியேற்றங்கள் நிறுவுவதையும் நோக்கமாக கொண்டு செயற்பட்டு வருகிறது.

இதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் குறித்த இன மக்களிற்கு எதிராக இந் அரச நிறுவனங்கள் செயற்படுவதை நிறுத்த வேண்டும். கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் தமிழ்மக்கள் குறிப்பாக இந்துக்கள் சுதந்திரமான முறையில் தமது காரியங்களையும் மத சடங்குகளையும் மேற்கொள்ள உள்ள தடைகள் அகற்றப்படுவதோடு கன்னியா வெந்நீரூற்று பிரதேசம் தொல்பொருள் ஆய்விற்கு உட்பட்டது என்ற தீர்மானம் இரத்துச் செய்யப்படவேண்டும் என அவர் விடுத்துள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts