கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜுன் 27 திறக்கப்படும் ! அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாகும்

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாத யாத்திரீகர்களுக்காக காட்டுப்பாதை எதிர்வரும் ஜுன் மாதம் 27ஆம் திகதி திறக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜுலை ஒன்பதாம் திகதி மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையிலான முன்னோடி மாநாடு நேற்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் வைத்தே காட்டுப்பாதை தொடர்பில் மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா ஜுலை மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

இந்த நிலையில் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிருநாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கம்.

அதனால் மேற்படி உற்சவம் மற்றும் பாதயாத்திரை தொடர்பாக பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன. அங்கு, குறித்த 12 நாட்களில் காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே காட்டிற்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தனித்தனியாக அல்லது ஐந்து பேர் சேர்ந்து காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். குறைந்தது 15 அல்லது 20 பேர் அல்லது அதற்கும் அதிகமான தொகையினர் சேரும் போது தான் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்.

அத்துடன் யாத்திரீகர்கள் அனைவரும் தத்தமது அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts