அரசாங்கம் தன்னைப் பாதுகாக்கவும், தமிழர்களை அடக்;கவுமே கொரோனா சட்டத்தைப் பயன்படுத்துகின்றது… (மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் – க.மோகன்)

 நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் பாதுகாப்புச் சட்டம் அரசாங்கம் தன்னைப் பாதுகாக்கவும், தமிழர்களை அடக்கவுமா? பயன்படுத்தப்படுகிறது என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கேள்வி எழுப்பியுள்ளர்.

 
சாதாரண மக்களுக்கு ஒருவிதமாகவும், ஆளுந்தரப்பு பிரதிநிதிகளுக்கு ஒருவிதமாகவும் கொரொனா சட்டம் பாவிக்கப்படுகின்றமை தொடர்பில் இன்றைய தினம் (17) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
 
அண்மையில் இலங்கை இராணுவ தளபதி கூறிய கருத்தானது தமிழர்கள் மாவீரர் தினத்தை ஒன்று கூடி அனுஷ்டிக்க முடியாது அவ்வாறு மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஒன்று கூடினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் இதே வேளை சில தினங்களுக்குள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்களைக் கூட்டி ஒரு மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதே வேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வந்தாறுமூலை எனும் இடத்தில் பல நூறு மக்களை ஒன்று கூட்டி கட்சிப் பணிமனை திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது. இதற்காக சுகாதார திணைக்களத்தின் அனுமதியோ அல்லது பொலிசாரின் அனுமதியோ பெறப்படவில்லை. இதன் போதெல்லாம் கொரோணா சட்டம் இலலையா? அல்லது இவர்களுக்கு மாத்திரம் சட்டம் வளைகின்றதா? என்றே கேள்வி கேட்கத் தோணுகின்றது.
 
அதேபோல் இன்னுமொரு ஆளும்தரப்பு பிரதிநிதி அவரின் அலுவலகம் திறக்கின்றார். இவற்றின் போதெல்லாம் கொரோனா சட்டம் எங்கு செல்லுகின்றதோ தெரியவில்லை. நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் பாதுகாப்புச் சட்டம் அரசாங்கம் தன்னைப் பாதுகாக்கவும், தமிழர்களை அடக்கவுமே பயன்படுத்தப்படுகிறது போல் தெரிகின்றது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொல்பொருள் திணைக்களத்தின் தமிழர் பகுதி நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தனியார் காணி ஒன்றினுள் சமூக இடைவெளி மற்றும் அனைத்து சுகாதார வழிமுறைகளும் பேணப்பட்டு உணவு தவிர்ப்பு போராட்டமொன்று தொடரப்பட்ட வேளை கொரோனா பாதுகாப்புச் சட்டத்தை காரணம் காட்டி ஏறாவூர் பொலிசார் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவைப் பெற்று உணவு அப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்தினார்கள். இவ்வாறு பல போராட்டங்களுக்கு கொரோனாவைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியும் உள்ளார்கள்.
 
இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொரோனாவை பாவித்து தமிழர்களின் நியாயமான ஆதங்கங்களை அரசாங்கம் தடுத்து வருவதாகவே தோணுகின்றது. எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறாக எமது மக்களின் நியாயபூர்வமான அனுஸ்டிப்புகளை மேற்கொள்வதற்கும் கொரோணா சட்டம் பாயும். ஆனால் அவர்களின் களியாட்டங்களின் போது மாத்திரம் கொரோனா ஏற்படாது என்று தெரிவித்தார்

Related posts