அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை நன்கறிந்தவள் நான்;!பெண்களின் அரசியல்பிரவேசம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்!

அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி நிறையவே அறிந்தவள் நான். இன்று 25வீத பெண்கள் அரசியல்பிரவேசம் சமுதாயத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர்தினவிழாவில் உரையாற்றுகையில் வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

108வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி வேள்வி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர்தினவிழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விழா கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நேற்றுமுன்தினம் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும்இ வேள்வி பெண்கள் அமைப்பின் தேசிய தலைவியுமான திருமதி.பி.லோகேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்கிரம கலந்து சிறப்பிக்க வட மாகாண சபை முன்னாள் அமைச்சர்  அனந்தி சசிதரன்   காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில்  மேலும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்பட  சுமார் 800 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன்  அவர்கள் உரையாற்றுகையில்

பெண்கள் அரசியலில் எதிர்கொள்ளும்  சவால்கள் என்பதனை நேரடியாக அனுபவித்துள்ளேன். நீங்கள் தற்பொழுது ஆரம்ப கட்ட அரசியல் பெண்களாக காணப்படுகின்றீர்கள் .படிப்படியாக நாங்கள் வளர்ந்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நிலை நிறுத்த ஒன்று படுவோம்.

இந்நிகழ்விற்காக வட மாகாணத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கின்றேன். ஆனால் இந்நிகழ்வை நான் தவறியிருந்திருந்தால் எனது அனுபவத்தின் ஒரு முக்கிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் என நினைக்கின்றேன். எனெனில் இங்கு அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து இனங்களை மறந்து ஒரு ஐக்கியத்துடன் பயணத்தை ஆரம்பித்து இருக்கின்றீர்கள். இந்த சமிக்ஞையானது எமது நாட்டின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை உருவாக்குவதற்கு உதவும் என்றார் .

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும் வேள்வி பெண்கள் அமைப்பின் தேசிய தலைவியுமான திருமதி.பி.லோகேஸ்வரி  உரையாற்றுகையில் :

உள்ளுராட்சி மன்றங்களில் தற்பொழுது 25 வீதமாக பெண்கள் இருக்கின்றார்கள் என்றால் அது யாரும் தட்டில் வைத்து வழங்கியதல்ல. மாறாக அது  பல பெண் உரிமை செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தேசிய சர்வதேச ரீதியில் அமைப்புக்களின் குரல் கொடுத்ததே.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் இது வழங்கப்பட்டது. எனவே இவ்வாறான பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த 25வீதம் உண்மையிலே பெண்களை பொறுத்தவரையில் போதாது என்றே குறிப்பிட முடியும். ஆனால் இலங்கையில் காணப்படுகின்ற அரசியல் கலாச்சாரத்தோடு பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது பல்வேறு தடைகளை உடைத்தெறிய வேண்டியுள்ளது.

அவ்வாறான நீண்ட கால அரசியல் பயணத்தை தொடரும் நாம் எந்த ஒரு அரசியல் இலாபத்திற்கும் தலைசாய்க்காது நீதி தேவதைபோல் பெண் அரசியல் நீதி தேவதையாக செயற்பட வேண்டும். என்றார்.

மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில்:

வேள்வி பெண்கள் அமைப்பினூடாக அரசியலில் தற்போது பிரவேசமாகியுள்ள பெண்கள் தங்களுடைய தகைமைகளை படிப்படியாக அதிகரித்து கொண்டு பயணிக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே நாம் அன்றாடம் எதிர்நோக்கின்ற சவால்களை அவ்அவ் சட்டங்களுக்கு ஏற்ப அணுக முடியும். தேசிய ரீதியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை தற்பொழுது உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள பிரதிநிதிகளாகவுள்ள நீங்களே தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Related posts