இன்று மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் நிறைவுறும் மஹாம் ருத்யுஞ்ஜய யாகம்.36யாகங்களிலும் பங்கேற்ற மேலதிகஅரசஅதிபர் வே.ஜெகதீசன்.

இந்துகலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவியரீதியில் கொரோனா விலக அம்பாறை மாவட்ட  இந்து ஆயங்களில் நடைபெற்றுவந்த மஹாம் ருத்யுஞ்ஜய யாகம் மற்றும் பிரார்த்தனைவழிபாடுகள் இன்று(30 ) நிந்தவுர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் நடைபெறும் யாகத்தோடு நிறைவுக்குவருகிறது.
 
அகிலத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற  கொவிட் 19 வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் இன்று சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
உலகமெங்கும் மிக வேகமாகப் பரவிவரும்  கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 17லட்சம் பேரை  பலியெடுத்துள்ளது. 7கோடி மக்களுக்குமேல் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய நோயில் இருந்து விடுபட்டு உலக மக்கள் அனைவரும் சுகநலமாக வாழ வேண்டுமென இன மத மொழிகள் கடந்து உலக மக்கள் அனைவரும் தங்களது மத ரீதியான பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இலங்கையிலும் இந்து ஆலயங்கள் விகாரைகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் போன்ற மதத் தலங்களில் இறை பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றுவந்தன.
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் இவை தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தன.
 
பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் கருத்துரைக்கையில்:
நாட்டில் கொரோனாத் தொற்றை அடியொடு ஒழிக்க இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இறைவனை நோக்கி யாகம் பிரார்த்தனைசெய்யவேண்டும்.
அதற்காக நாட்டில் 13 மாவட்டங்களில் இதுவரை 76 ஆலயங்களில் இந்த ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன. அதிலும் விசேசமாக அம்பாறை மாவட்டத்தில் 36ஆலயங்களில் நடைபெற்றுள்ளன.பாராட்டப்படவேண்டிய விடயம். நாட்டில் அரைப்பங்கு யாகம் அம்பாறையில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மேலதிக அரசஅதிபர் திருவாளர் ஜெகதீசன் அத்தனை யாகங்களிலும் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும் எமது மாவட்டகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் பங்களிப்பையும் ஊடகவியாளர் திரு. சகாதேவராஜாவின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. என்றார்.
 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உயரிய ஆன்மீக சிந்தனைக்கு அமைவாக அம்பாறை மாவட்ட அசரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில்இந்து சமய கலாசார திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் கே.ஜெயராஜின் ஒருங்கிணைப்பில் ஆலய நிருவாகத்தினரின் பங்களிப்புடன் ஆலயங்களில் மஹாம் ருத்யுஞ்ஜய ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
 
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களான காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம் பாண்டிருப்பு திரௌபதை அம்மனாலயம் உகந்தைமலை ஸ்ரீமுருகன் ஆலயம் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயம் பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலயம் விநாயகபுரம் சிவன் ஆலயம் விநாயகபுரம் படபத்திர காளி அம்மன் ஆலயம் திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயம் தம்பிலுவில் முனையூர் படபத்திரகாளி அம்மன் ஆலயம் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயம் சித்தானைக்குட்டி ஆலயம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயம்  மற்றும் நாவிதன்வெளி ஆலையடிவேம்பு என பல இடங்களிலும் உள்ள ஆலயங்களிலும் இவ்வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மாதம் 3ந் திகதி காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி 35 இந்து ஆலயங்களில் மஹாம் ருத்யுஞ்ஜய யாகங்கள் இடம்பெற்று முடிந்திருப்பதுடன் இன்ற 30ஆம் திகதி நிந்தவுர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅ ம்மன் ஆலயத்தில் நடைபெறும்  இந்தஹோம வழிபாடுகள் நிறைவு பெறவுள்ளது.
 
முழுமுதல் பொருளாம் சிவபெருமானை வேண்டி மேற்கொள்ளப்படுகின்ற இந்த மஹாம் ருத்யுஞ்ஜய யாகத்தின் போது குருமார்களால் உச்சரிக்கப்படுகின்ற
 ‘ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்தனம்! உர்வாருகமிக பந்தனாத் ம்ருயோர் முஷீய மா அம்ருதாத்’ 
என்பது சக்தி வாய்ந்ததாகும்.
 
(இதன் பொருள் ஓம் முக்கண்ணனாகிய சிவபெருமானே! நறுமணம் கமழுபவனே உயிர்க் குலத்தைக் காப்பவனே உன்னை வணங்குகிறேன். பழுத்த வெள்ளரிப்பழம் செடியில் இருந்து விடுபடுவது போல நான் மரணத்தின் பிடியில் இருந்து விடுபடுவேனாக! உண்மை இயல்பாகிய மரணமிலாப் பெருநிலையை ஒருபோதும் மறவாதிருப்பேனாக)
 
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தில் பொருள் பொதிந்துள்ளதுடன் வேத மந்திரங்களின் இம்மந்திரமானது சக்தி மிக்கதாகவும் நம்பப்படுகின்றது.
 
ஹோம இறைவழிபாட்டு நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதேச செயலாளர்கள் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆலய நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டுமென ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.
 
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் உரையாற்றுகையில்
இறைசக்தியால் மட்டுமே கொரோனாவை ஒழிக்கமுடியும். அவனின்றி அணுவும் அசையாது. எனவே அனைவரும் இணைந்து இறைவனை பிரார்த்திப்பதன் மூலமாக கொடியகொரோனாவை நாட்டிலிருந்து ஒழிப்போம் .
 
  பிறர் நலனையும் சுகத்தையும் சிந்தித்துப்பார்க்கவைத்திருக்கிறது இந்தக்கொரோனா. அதனால்தான் ஆலயங்களில் அனைவரும் சேர்ந்து அனைவருக்குமாகவும் யாகம்செய்து பிரார்த்தனை செய்கிறோம்.அதற்காகத்தான்’தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சொல்கிறோம் . எனவே எல்லோருக்குமாக பிரார்த்திக்கிறன்ற சமயம் எமதுதாய்ச்சமயம்  இந்துசமயம்   
இறைவன் இவ்வாறான விடயங்களை மனித சமுதாயத்திற்கு விடுவதென்பது துயரமானதாக இருந்த போதிலும் எங்களை அவ்வப்போது நல்வழிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. 
நாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கை முறைகளை விடுத்து இன்று சுயநலமிக்கவர்களாக நான் எனது குடும்பம் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
 
உலகம் நான் என்ற சுயநல சிந்தனையில் இருந்து நாம் என்னும் சிந்தனைக்குள் மெதுமெதுவாக காலடியெடுத்து வைக்கின்ற உன்னத நிலைக்கு இந்த கொரோனா நோய் மனிதர்களை இட்டுச் சென்று இருப்பதோடு மற்றவர்களின் நலத்துக்காகவும் கட்டாயம் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்ற நிலைக்கு மனிதனை நெறிப்படுத்தியுள்ளது. 
 
இந்து மதத்தின் கோட்பாடான அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு உயிர் கொடுத்து மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கின்றது கொரோனா வைரஸ்’எனத் தெரிவித்தார்.
 
நாட்டில் நடைபெற்ற அத்தனை யாக நிகழ்வுகளையும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் காலை6.30 மணிமுதல் 7மணிவரை நேரடி அஞ்சல் செய்துவந்தது. பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் இ.ஒ.கூ.தாபன தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளையுடன் கலந்துரையாடி இந்நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஒலிபரப்பப்பட்டுவந்தன.
 
இன்றுடன் அவை நிறைவுக்குவருகின்றன. எனினும் ஆலயங்களில் இத்தகைய யாகங்களை நிருவாகங்கள் தொடரலாம் என பணிப்பாளர் உமாமகேஸ்வரன் தெரிவிக்கிறார்.
 
ஆன்மீகப்பணயத்தில் எமது ஊடகமும் பங்களித்துள்ளதையிட்டுமகிழ்வடைகிறோம்.

Related posts