இன்றைய சமூகத்திற்கு அறநெறி கல்வி ஊட்டப்பட வேண்டும்

உலகத்தில் பிறந்த மனிதர்களிடம் அறநெறி சார்ந்த நல்லெண்ணங்களும்,அறநெறி சார்ந்த உண்மையான அறிவு விடயங்களும் போதியளவு இல்லாததால்தான்  மனித சமூகம் மனிதர்களுக்கு கொடுமைகளை இழைக்கின்றது.சிறுவர் கொடுமைகள்,கொலைகள்,களவுகள்,அநியாயங்கள் செய்யும் மனிதர்களைத்தான் தினமும் சமூகத்தில் பார்க்கின்றோம்.இன்றைய மானிட சமூகத்திற்கு அறநெறி சார்ந்த அறிவுள்ள கருத்துக்கள்,ஒழுக்கங்கள் விடயங்கள்,நடத்தைப்பண்புகள் என்பன இன்றைய சமூகத்திற்கு நிறைவாக ஊட்டவேண்டும் என மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

கல்லடி பூநொச்சிமுனையைச் சேர்ந்தவரும்,பிரபல சமூகசேவையாளருமான வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரம் அவர்களினால் தொகுப்பட்ட “ஔவையின் அமுதமொழிகள்” நூல் வெளியீட்டுவிழா கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018)  காலை 10.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷானந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் “அதிபர் திலகம்” திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் :-இன்றைய சமூகத்தில் உள்ளவர்களுக்கு போதியளவு அறநெறி சார்ந்த கருத்துக்கள் ஊட்டப்பட வேண்டும்.அவ்வாறு அறநெறி சார்ந்த ஆழமான கருத்துக்களினால்தான்  மனித சமூகத்தை வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறநெறி கல்வியை சிறப்பாக படித்து அதன்மூலம் நல்லெண்ணத்துடன் சமூகத்தில் ஒழுக்கமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இன்றைய சமூகத்தினரிடம் அறநெறிக்கல்வியானது அருகிற்கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.சமூகத்தில் மனிதர்களாக நடமாடும் நாம் அறநெறிக்கல்வியை முழுமனதுடன் படிக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறியை படிப்பதற்கு மாணவர்களையும்,உங்கள் குழந்தைகளையும் அறநெறி நிலையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.அறநெறி நிலையத்தினால் நல்ல அறநெறி விடயங்கள்,கருத்துக்கள் ஊட்டப்படுகின்றது.இதனால் மனிதர்களை புனிதர்களாக்க முடியும்.அறநெறி அறிவில்லாதவர்கள்தான் நாட்டில் வன்கொடுமைகள் அரகேற்றப்படுகின்றது.அறநெறிக் கருத்துக்கள்,போதனைகள்தான் நாட்டுக்கு தேவையாகும்.

ஔவையின் அமுதமொழிகள் நூலானது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புடன் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இதனை மாணவர்கள்,பெரியோர்கள் விரும்பி படிக்கவேண்டும்.இது எங்களை வளப்படுத்துவற்கும்,ஆளுமையாளர்களாக உருவாக்குவதற்கும் ஔவையின் அமுதமொழிகள் நூலானது பயனுள்ளதாக அமையும் எனத்தெரிவித்தார்.

Related posts