உல்லைக்குவரும் உல்லாசப்பயணிகள் பதியப்படவேண்டும்!

இலங்கையின் உல்லாசபுரியாக விளங்கும் அறுகம்பை-உல்லைக்கு வரும் அனைத்து உல்லாசப்பயணிகளின் விபரங்கள் பதியப்படவேண்டும். அங்கு விடுதிகளில் வீடுகளில்  தங்குவோர் விபரமும் பதியப்படவேண்டும் என்று பொத்துவில் பிரதேச கொரோனா தடுப்புச்செயலணிக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட்19 தாக்கத்தினை தடுப்பதற்காக பிரதேச செயலக ரீதியாக  பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும்  முன்னாயுத்த கலந்துரையாடல் கூட்டம்   பொத்துவில் பிரதேசசெயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ்  தலைமையில்  பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது .
 
இக்கூட்டத்தில்  பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.வாஸித்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இராணுவ முகாம் கட்டளைத்தளபதி  பொத்துவில் பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எம்.எ.சமட் அறுகம்பை சுற்றுலாச்ங்க நிருவாகிகள் உள்ளிட்ட பிரமுகர்கள்   கலந்து கொண்டனர்.
 
இவ் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
 
பொத்துவில் கடற்கரைப்பரப்பில் கப்பல் அல்லது இயந்திரப்படகுகள் சந்தேகத்திற்கிடமானமுறையில் நீண்டநேரம் தரித்துநின்றால் பொதுமக்கள் அருகிலுள்ள இராணுவப்படைமுகாம் அல்லது பிரதேசசெயலகத்தில் அறிவிக்கவேண்டும்.
வெளியிடங்களிலிருந்து பொத்துவில் பிரதேசத்திற்கு வரும் நபர்கள் உடனடியாக கிராமசேவை அலுவலரிடம் பதியவேண்டும்.அதேபோல்  பலதேவைகளின்நிமித்தம் இங்குவரும் வாகனங்கள் அனைத்தும் பதியப்படவேண்டும்.
பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல்மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர்த்தல் மற்றும் வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சவர்க்காரம் அல்லது கையை சுத்தசெய்யும் பதார்த்தங்களை இட்டு கைகளை கழுவுதல் வேலை இல்லா நேரங்களில் அநாவசியமாக வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டன.
 
அவசியமேற்படின் பொதுஇடங்களில் தொற்றுநீக்கவும் அவசியமான உணவுப்பொருட்களை நடமாடி விநியோகம் செய்யவும் முப்படையினர் சுகாதாரவைத்தியபணிமனையினர் பிரதேசசபையினர் தயார்நிலையிலிருக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
எடுக்கப்பட்ட சகலதீர்மானங்களும்  ஒலிபெருக்கிவாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட நடவடிக்கைஎடுக்கப்படவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது..

Related posts