ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று(06) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நேற்று (05) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த தனியார் ஊடகமொன்றில் கடமை புரியம் ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை, அங்கு வந்திருந்த சிலர் அச்சுறுத்தி, வீடியோ எடுக்க விடாது தடுத்ததுடன். ஊடகவியலாளரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

அத்துடன், அவரிடம் இருந்த கமெராவைப் பறிப்பதற்கு பல தடவைகள் முயற்சி செய்துள்ளனர். இதனால் ஊடகவியலாளர், அந்த இடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குகராசு சுபோஜன், மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தமது ஊடக கடமைக்கு இடையூறு செய்து, தாக்க முயற்சித்ததாக இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் மேற்படி இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான ஊடக அடக்குமுறை இதுவாகும். எனவே, ஊடகவியலாளரை அச்சுறுத்திய குறித்த குழுவினரை பொலிஸார் கைது செய்ய வேண்டுமென ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கரடியனாறு  பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts