சீட்டிழுப்பின் மூலம் வெற்றிபெற்ற பரிசுத் தொகையினை பிள்ளைகள், குடும்பம் மற்றும் இறுதியாக நாட்டின் நலன் கருதி ஈடுபடுத்துங்கள் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சில கோடீஸ்வர சீட்டிழுப்பு வெற்றியாளர்களின் மோசமான நிதி மேலாண்மை காரணமாக ஏற்கனவே இருந்த நிலையை விட கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையால் வெற்றி பணப் பரிசை பிள்ளைகள், குடும்பம் மற்றும் இறுதியாக நாட்டின் நலனுக்காக ஈடுபடுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
 
அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்றுக மற்றும் ஜயோதா சீட்டிழுப்புகளின் மூலம் உருவான சுபிரி கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (2021.01.07) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
 
652ஆவது கோடிபதி கப்றுக சீட்டிழுப்பின் வெற்றி பரிசுத் தொகையான 87,991,625 ரூபாயை வெற்றி கொண்ட அம்பன்பொல குமார பதிரன்னேஹேலாகே சுனில் மற்றும் 1717ஆவது ஜயோதா சீட்டிழுப்பின் வெற்றிப் பரிசுத் தொகையான 57,138,276 ரூபாயை வெற்றி பெற்ற  கல்கமுவ ஏ.ஜி.பி.ஜி.கொடிதுவக்கு ஆகியோருக்கான காசோலைகள் இவ்வாறு கௌரவ பிரதமரினால் வழங்கிவைக்கப்பட்டது.
 
அம்பன்பொல விற்பனை முகவர் யூ.டி.எல்.தினேஷ் குமார மற்றும் கல்கமுவ விற்பனை முகவர் டி.எம்.எஸ்.பி.மெணிக்கே ஆகியோர் இதனை விற்பனை செய்த விற்பனையாளர்களாவர்.
 
சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் வெற்றி பெற்ற பணப் பரிசுத் தொகையை தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால அபிவிருத்திக்காக மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கினார்.வெற்றி பெற்ற தொகையை தனிப்பட்ட ரீதியில் வெற்றி பெற்றிருப்பினும் இத்தொகையை முறையாக தமது வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.
 
பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு இதனை சிறந்த முதலீடாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். பாரிய தொகை கிடைத்தவுடன் அதனை அநாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் இறுதியில் ஒன்றும் இல்லாத நிலைக்கு மீண்டும் தள்ளப்படலாம். சில கோடீஸ்வர சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் இவ்வாறான வெற்றிகளின் பின்னர் மோசமான நிதி மேலாண்மை காரணமாக ஏற்கனவே இருந்த நிலையைவிட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற சந்தர்ப்பங்கள் பல நேர்ந்துள்ளன. அதனால் இப்பணத்தை பிள்ளைகளதும், குடும்பத்தினதும் இறுதியாக நாட்டினதும் நலன் கருதி ஈடுபடுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
 
குறித்த நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அமித கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts