எரிபொருள் விலையேற்றம்: அமைச்சரவை அதிரடி தீர்மானம்

பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி 117 ரூபாவாகவிருந்த பெற்றோல்-92 137 ரூபாகவும், பெற்றோல்-95 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 148 ரூபாவிற்கும் விற்கப்படவுள்ளது.

இதேவேளை, 95 ரூபாவாகவிருந்த டீசல் 14 ரூபாவினாலும், 110 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் 9 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

44 ரூபாவிற்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், சமுர்தி மற்றும் மீன்பிடித்துறை ஊழியர்கள் பழைய விலைக்கே மண்ணெண்ணெயை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் தளம்பல் ஏற்படும் போது, அது இலங்கையை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக, ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் அந்த இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, ஈரான் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் நிலை ஏற்படும்.

எனினும், பொருளாதார தடைகளுக்கு முன்னரே, உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிய ஒரே தினத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts