திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவார்கள் -வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்

திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவதனை எவராலும் தடுக்கமுடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் முதல் தடவையாக க.பொ.த.உயர்தரப்பிரிவு வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் 09 திகதி புதன்கிழமை இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம் .ஜாபீர் நாவிதன்வெளி வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.செல்வபதி சிறப்பு அதிதிகளாக நாவிதன்வெளிக் கோட்டக்கல்;விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து ஆசிரிய ஆலோசகர் ஆர்.குணசீலன் வேப்பையடிவைத்தியசாலையின் வைத்தியர் திருமதி எஸ்.ஜே.அனீஸ்,நாவிதன்வெளி இலங்கைவங்கியயின் முகாமையாளர் கு.சசிதரன் நாவிதன்வெளி வேள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஏ.தனுராஜ் வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி .த.நேசராசா மற்றும் பாடசாலைகளின் அதிபர்;கள் அன்னமலை 2 கிராமசேவகர் பிரிவில் உள்ள பொது அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

அவர் அங்கு மேலும் பேசுகையில் வெளியான  க.பொ.த.சாதாரண தரப் பெறுபேற்றில் நாவிதன்வெளிப்பிரதேச பாடசாலைகள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்து இருக்கிறது அதிலும் கலைமகள் வித்தியாலயத்தின் சாதனையானது இரட்டைச் சகோதரர்களால் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது அதே போன்று 2016 ஆண்டு க.பொ.த சாதாரணதரப்பரீட்சையின் வலயமட்டத் தரப்படுத்தலில் முதலாம் இடம்பெற்று சாதனைபடைத்த பாடசாலை என்பதனை யாரும் மறந்து விடமுடியாது அந்த வகையில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சீ.பாலசிங்கனையும் பாராட்டுகின்றேன்

கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் சரியாகப் பயன்படுத்தும் போதுதான் சமூகத்தினை சிறந்த முறையில் வழிநடாத்தி எதிர்காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட சமூகமாக மாற்றம் செய்ய  முடியும் இது மாணவர்களாகிய உங்களது கையிலேயே இருக்கின்றது இன்று உயர்தரத்தில் இணைந்துகொள்கின்ற நீங்கள் 2020 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றுவீர்கள் அப்போது உங்களது பெறுபேறானது சாதனை நிலைநாட்டப்பட்டதாக அமையவேண்டும் அதற்காக உங்களது கடின உழைப்பும் விடாமுயற்சியும் முக்கியமானதாகும்

எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அது வலயக்கல்வி அலுவலகம் தட்டிக்கழிக்காமல்  நிறைவு செய்து கொடுப்பதில் பின்நிற்பதில்லை அந்த அடிப்படையில் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் பெற்றோர்களினதும் மாணவர்களினதும் கோரிக்கையானது நியாயபூர்வமானது என்பதனை எமது அலுவலகர்கள் இணைந்து தீர்மானித்ததன் பிரகாரம் உயர்தர வகுப்பினை ஆரப்பிப்பதற்கு உதவியிருக்கின்றோம். இந்த வகுப்பில் கற்கின்ற மாணவர்களை நல்லநிலைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரதும் உதவிகளும் ஒத்தாசைகளும் தேவை அதேபோன்று நாவிதன்வெளிப்பிரதேசத்தில் வேள்ட்விசன் லங்காநிறுவனம் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர் மேலும் அவர்களது உதவிகளும் எங்களுக்குத் தேவையாக இருக்கின்றது என்றார்.

Related posts