எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம்: ரணில் விக்ரமசிங்க

“உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் எனவே  தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்  

“தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும், அதுவே உண்மையான திறமை” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

“2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருக்கின்றது.

அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள அரசமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும்.

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்

கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்குக் கொண்டு வர முடிந்தது. அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பயணம் இவ்வருட வரவு – செலவுத் திட்டத்துடன் ஆரம்பிக்கும்” – என்றார்.

பொதுச்செலவு முகாமைத்துவம் தொடர்பான விசாரணைக்குப் பதிலளித்த ஜனாதிபதி, “புதிய நிதி கண்காணிப்பு குழுக்களை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள குழுக்களைப் பலப்படுத்துவதற்கும் இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகள் உள்ளன.

Related posts