கருணாவையும், ஞானசாரவையும் விற்று ஹரீஸ் எம்.பியாகலாம் என கனவு காண்பது மெய்ப்படாது

விடுதலை புலிகளின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் வி.முரளிதரனால் எனது உயிருக்கும் கல்முனை மண்ணுக்கும் ஆபத்து என ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது மட்டுமில்லாது தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்தும் பேசிவருவது அவரது அரசியலின் தோய்வுநிலையையும் வாக்கு வங்கியின் சரிவையும் அப்படமாக காட்டுகிறது என தேசிய காங்கிரசின் கொள்கை அமுலாக்கள் மற்றும் சட்டவிவகார செயலாளரும் தேசிய காங்கிரசின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் (அலறி) தெரிவித்தார்.
 
நேற்று (20) திங்கட்கிழமை மாலை மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,
 
கடந்த 18 வருடங்களாக அரசியல் இருந்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கல்முனை முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர் என்று பல்வேறு அதிகாரங்களை கையில் வைத்திருந்தார். அந்த அதிகாரங்களை கொண்டு கல்முனை மாநகர பொது பஸ்நிலையத்தில் ஒழுங்கான மலசல கூடத்தையே கட்டவில்லை என்பதே அவரின் அரசியல் வாழ்வுக்கு சாட்சியாக இருக்கிறது. முஸ்லிங்கள் அதிகமாக வாழும் மாநகரமான கல்முனை இன்றும் பாழடைந்து காணப்பட காரணம் அவரே.
 
மறைந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகளான ஏ.ஆர்.எம்.மன்ஸூர் கட்டிய கட்டிடங்கள், எம்.சி. அகமட் செய்த சேவைகள், எம்.எச்.எம். அஸ்ரப் விட்டுச்சென்ற அபிவிருத்திகள் இன்றும் கல்முனையில் அப்படியே இருப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. கடந்த 18 வருடங்களாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் அந்த மண்ணுக்கு செய்த சேவைகள் ஒன்றுமில்லை. விளையாட்டு பிரதியமைச்சராக இருந்து கல்முனை சந்தேங்கேணி மைதானத்தை என்ன செய்தார்? வங்கிகளுக்கு பொறுப்பான பிரதி அமைச்சராக இருந்த அவர் கல்முனையில் செய்த பொருளாதார முன்னேற்றம் என்ன? உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இருந்த அவரால் அவரின் ஊர் பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாமல் போனது. தனது சொந்த பிரதேசத்தின்  பிரச்சினைகளை கூட  தீர்க்கும் ஆளுமையும் திராணியும் அவரிடமில்லை.
 
இப்போது கல்முனை பறிபோகிறது, அம்பாறை காவுகொள்ளப்படுகிறது, முஸ்லிங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது என போலியான கோஷங்களை எழுப்பி வாக்குகளை பெற எத்தணங்களை எடுக்கிறார்.அது இப்போது மக்கள் மத்தியில் வேலைக்கு ஆகாது. சூடாக்கும் அரசியலுக்காக இப்போது விடுதலை புலிகளின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணாவையும், பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரவையும் விற்று ஹரீஸ் எம்.பியாகலாம் என கனவு காண்பது அவரின் பார்வையில் எவ்வளவு நல்ல செயலோ தெரியாது மக்களின் பார்வையில் இது கேடுகெட்ட தனமாகும்.
 
தமிழர் முஸ்லிம் இனவாத கருத்துக்களை விதைக்கும் இவரைப்போன்ற நச்சுவிதைகள் காணாமலாக்கப்பட்டு புதிய பாதையில் சரியான திசையில் ஒற்றுமையான இலங்கையர்களாக நாங்கள் வாழவேண்டும். அதுதான் எமது கடந்த கால பெரியார்கள் கற்றுத்தந்த வரலாறாகவும் அமைந்துள்ளது என்றார்.

Related posts