கல்முனை கரையோர அபிவிருத்தியில் தமிழ்ப்பிரதேசங்கள் முற்றாக புறக்கணிப்பு!கூட்டத்திற்கு தமிழ்உறுப்பினர்களுக்கு கதவடைப்பு

கல்முனை மாநகர கரையோர அபிவிருத்தி திட்டத்தில்  தமிழ்ப்பிரதேசங்கள் முற்றாக புறக்கணிப்பட்டுவருகிறது. அது தொடர்பாக இடம்பெற்ற திட்டமிடல் கூட்டத்திற்கு தமிழ் பிரதேசசெயலாளர் மற்றும் மாநகரசபை தமிழ்உறுப்பினர்களுக்கு எவ்விதஅழைப்பும் விடுக்கப்படாமல் கதவடைப்பு இடம்பெற்றுள்ளது. மாநகரஅபிவிருத்தியில் இனரீதியான பாகுபாடு தொடர்கிறது.கொரோனாவை விட கொடியவர்கள் இவர்கள். 
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் பெரும்விசனத்துடன் தெரிவித்தார்.
 

கல்முனை மாநகரசபைஎல்லைக்குள் தமிழ்ப்பிரதேசங்கள் இல்லையா? தமிழர்கள் இல்லையா? என கேள்வியெழுப்புகிறார் ராஜன்.

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சாய்ந்தமருது தொடக்கம் பெரியநீலாவணை வரை கடற்கரை சூழலை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கல்முனை மாநகரசபை மேயரின் எற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதில் மாநகரசபை மேயர் மற்றும் அதிகாரிகள் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உட்பட பலர் அழைக்கப்பட்டு நடைபெற்றுள்ளது.

கல்முனை மாநகர கரையோர அபிவிருத்தி திட்டமிடல் குழுவின் இக்கலந்துரையாடல் தொடர்பாக மாநகரசபையின் தமிழ் உறுப்பினர்களுக்கோ கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கோ எந்த அறிவித்தலும் வழங்கப்படாமலும் அழைக்கபடாமலும் நடைபெற்றுள்ளது. குறித்த திட்டம் தொடர்பில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலும் மாநகரசபையிலும் இருவேறு கூட்டங்கள் நடந்துள்ளன.

இக்கூட்டங்களுக்கு தமிழர்கள் அழைக்கப்படவில்லை. தமிழ்ப்பிரதிநிதிகளுக்கு கதவடைப்பு இடம்பெற்றமை தொடர்பாக உறுப்பினர் ராஜன் மேலும் கூறுகையில்:

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கடற்கரை பகுதிகள் எனும்போது சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை ஆகிய மூன்று முஸ்லிம் கிராமங்களும் கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை ஆகிய மூன்று தமிழ் கிராமங்களும் உள்ளன. ஆனால் தமிழ் தரப்புக்கு இது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கல்முனை மாநகர சபை என்பது தனியாக முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல. கல்முனை மாநகர மேயரினதும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசினதும் செயற்பாடு தமிழர்களை புறக்கணிப்பதாகவும் இனவாதமாக செயற்பட்டு வங்குரோத்து அரசியல் செய்வதாகவுமே தொடர்கிறது.

இப்படிப்பட்ட தொடர் புறக்கணிப்பும் பாகுபாடுமே தமிழ்மக்கள் தனியான பிரதேச செயலகம் தனியான நகரசபை கோருவதற்குக்காரணம் என்பதை மறக்கக்கூடாது. இவர்களிருவரினதும் செயற்பாடுகளை வைத்து முழு முஸ்லிம் மக்களையும் குற்றம்சாட்டமுடியாது. இவர்கள்தான் காலாகாலமாக ஒற்றுமையாகவிருந்த தமிழ்முஸ்லிம் சமுகங்கள் பிரிந்துநிற்பதற்குக் காரணம். கல்முனையில் இருசமுகங்களும் இனரிதீயாக பிளவுபடுவதற்கு இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பாடுபட்டுவருகின்றனர்.இந்த லட்சணத்தில் இன ஜக்கியம் பற்றியும் பேசிவருகின்றனர்.

கல்முனை நகரஅபிவிருத்திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் வேண்டுமென்றே தமிழ்பிரதிநிதிகளை அழைக்காமல் அத்தனை கூட்டங்களையும் திரைமறைவில் நடாத்தினார்கள். நாம் பூரணமாக எதிர்த்தோம். அதனால் அத்திட்டம் கிடப்பில் உள்ளது.முஸ்லிம் சகோதரர்கள் இந்த உண்மையை தெரிந்துகொள்ளவேண்டம்.


தமிழர்பகுதிக்குள் உள்ள இஸ்லாமாபாத்  கல்முனைக்குடி மற்றும் மருதமுனை  பகுதிகளில் கார்ப்பட் வீதி போடப்பட்டுள்ளது. ஆனால் அருகிலுள்ள தமிழ்க்கிராமங்களுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது. இன்றும் யாரும் அதனை நேரடியாகக்காணலாம்.
 
மாநகரசபைக்குட்பட்ட வாசிகசாலைகளில்  மருதமுனையில்  புனரமைப்பு நடக்கிறது .ஆனால் பாண்டிருப்பு பெரியநீலாவணை கல்முனை தமிழ்ப்பகுதிகளில் உள்ள நூலகங்கள் எவ்வித புனரமைப்போ அபிவிருத்தியோ இல்லாமல் பாழடைந்து அப்படியே காணப்படுகின்றது.
 
மலசலக்கூட கழிவுகளை கொண்டுவந்து முன்னாள்அமைச்சர் மன்சூர் கட்டிய நூலகத்திற்கு பின்னாலுள்ள தமிழர்பகுதிகளுக்குள் கொட்டுவது இஸ்லாமாத் மலசலக்கூடகழிவுகளை கல்முனை பன்சலமுன்பாகவுள்ள வடிகானுக்குள் விடுவது தொடக்கம் பெரியநீலாவணை தோணாக்களை திட்டமிட்டு நிரப்புவது வரை தொடர்ச்சியாக பாரபட்சங்கள் ஆக்கிரமிப்புகள் இனரீதியாக தொடர்கின்றன.
 
பெரியநீலாவணை கல்முனை மாநகர கடற்கரை அபிவிருத்தி எனும் விடயத்தை தலைப்பாக கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் சரி சமமாக தமிழ் கிராமங்கள் உள்ளபோதும் எமக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
 
இத்திட்டத்தினுள் சாய்ந்தமருது கடற்கரைப்பூங்கா கல்முனை பூங்கா மருதமுனை கடற்கரைப்பூங்கா ஆகிய இடங்கள் புனரமைப்புச்செய்யப்படவிருக்கின்றதாம். அப்படியெனின் கல்முனை பாண்டிருப்பு பெரியநீலாவணை போன்ற தமிழ்ப்பிரதேசங்களில் கடற்கரைப்பூங்காக்கள்   இல்லையா? அல்லது கடற்கரையே இல்லையா? ஏனிந்த பாரபட்சம்? பச்சை இனவாதத்தை கக்குகின்ற மேயராக அவர் வரலாற்றில் இடம்பெறுகிறார்.
 
எனவே இன ரீதியாக சிந்தித்து இனவாதத்தை விதைத்து மக்களைக்கூறுபோடுவது அவர்களா? நாங்களா? முஸ்லிம் மக்களே சிந்தியுங்கள். நியாயமான அரசியல்வாதிகளே உணருங்கள். இவர்களது பாரபட்சம் மற்றும்  பாகுபாடுகளே  தமிழ்மக்கள் தனியான பிரதேச செயலகம் தனியான நகரசபை கோருவதற்குக்காரணம் என்பதையும் மறக்கக்கூடாது.
இப்படி இனரீதியாக தொடர்ச்சியாக செயற்படும் மேயருக்கு இப்போதும் எமது சில தமிழ்உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு வழங்குவது நீதியா ?நியாயமா? இதற்குப்பின்னால் கையூட்டல்கள் இருக்கிறதோ என சந்தேகிக்கவேண்டியுள்ளது.
கல்முனை மாநகர சபை என்பது அனைத்து இனங்களுக்கம் பொதுவானது. தங்கள் அதிகாரங்களை வைத்து பக்கச்சார்பாக செயற்படுவதாயின் கல்முனை மாகரசபையை பிரித்து கல்முனை வடக்கு நகர சபை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார்.

குறித்த கூட்டம் பற்றி மாநகரசபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன்   க.செல்வராஜா க.சிவலிங்கம் குபேரன் ஆகியோரிடமும் கேட்டபோது தங்களுக்கும் எந்த அழைப்பும் தகவலும் கிடைக்கவில்லை என்றனர்..
 
 

Related posts