கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை –

சிறு மற்றும் பெரு போகம் ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் வடமேல் மாகாணத்தில் 12,500 ஹெக்டேயர் விவசாய நிலங்களை வளப்படுத்தும் வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (22.08.2020) அறிவுறுத்தியுள்ளார்.
 
மஹிந்த சிந்தனை கொள்கையின் கீழ் 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் நிறுத்தப்பட்டது. 
 
குருநாகல், மொரகொல்லாகம, சியம்பலன்கமுவவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது உத்தேச வடமேல் மாகாண கால்வாய் திட்டம் குறித்த திட்ட அறிக்கை, திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் அசோக பெரேராவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, சியம்பலன்கமுவ மீனவ சங்கத்தினரும் பிரதமரிடம் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர்.
 
வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தின் ஊடாக பிரதேசத்தின் 350 சிறிய குளங்கள் மற்றும் 8 பாரிய குளங்களை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன்,ஹக்வட்டுன நீர்த்தேக்கத்தின் கீழ் 2500 ஹெக்டேயர், மீ ஓய நீர்ப்பாசன அமைப்பில் 3500 ஹெக்டேயர் உள்ளடங்களாக மொத்தமாக 12 ஆயிரத்து 500 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படவுள்ளது.
 
இந்த திட்டத்தை செயற்படுத்தப்படுவதன் ஊடாக பெரு போகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சாகுபடி நடவடிக்கைகள் சிறு, பெரு ஆகிய இரு போகங்களிலும் சாகுபடி செய்யக்கூடிய வகையில் நீர் விநியோகிக்கப்படும். கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக சிறுநீரக நோய் குறித்த பிரச்சினையை தீர்த்தல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையிலான போராட்டத்தை குறைத்தல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
குறித்த நிகழ்வில் ஹிரியாகல ஹத்பத்துவ தலைமை நீதிமன்ற சங்கநாயக்கர் திஹவ கஸ்ஸன்தளுபொத மற்றும் நாகொல்ல ரஜமஹா விகாரையின் உபய விகாராதிபதி கனேகொட ரதனஜோதி தேரர், மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, கால்நடை பண்ணை மேம்பாடு மற்றும் பால் கைத்தொழில் துறை அமைச்சர் டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, வட மத்திய மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.ரஞ்சித், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
 
பிரதமர் ஊடக பிரிவு

Related posts